`தீபாவளி பண்டிகையின் போது அதிகரித்த நெகிழி பயன்பாடு’- சுற்றுச்சூழல்துறை அமைச்சர் வருத்தம்

`தீபாவளி பண்டிகையின் போது அதிகரித்த நெகிழி பயன்பாடு’- சுற்றுச்சூழல்துறை அமைச்சர் வருத்தம்
`தீபாவளி பண்டிகையின் போது அதிகரித்த நெகிழி பயன்பாடு’- சுற்றுச்சூழல்துறை அமைச்சர் வருத்தம்

தீபாவளி பண்டிகையின் போது நெகிழி பயன்பாடு அரிகரித்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும், இனிவரும் காலங்களில் மக்களின் மனநிலை மாற வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையிலும் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் வட்டாட்சியர் - கோட்டாட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனை நடைபெற்றது. ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய தொகுதியாக மாற்ற அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், “மத்திய - மாநில அரசுகள் தமிழகத்தில் 14 வகையான நெகிழிப் பைகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்ட நிலையில், தமிழக அரசும் மீண்டும் மஞ்சப் பை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதேவேளையில் தீபாவளி பண்டிகையின் போது நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் மக்களின் மனநிலை மாற வேண்டும், விழா காலங்களில் நெகிழி பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும்.

நெகிழி பயன்பாடு மனித இனத்திற்கு மட்டுமின்றி விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் ஆபாத்தானது, நீர் நிலைகளுக்கு கேடானது, நெகிழியை ஒழிக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், ஒரே நாளில் 187 டன் நெகிழி கழிவுகளை மாவட்ட நிர்வாகத்தினரை வைத்து சேகரித்து மறுசுழற்சிக்காக சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைப் போல மற்ற இடங்களிலும் நெகிழி கழிவுகளை அப்புறப்படுத்த முன் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com