பிளாஸ்டிக் தடை எதிரொலி : டாஸ்மாக் பார்களில் நுழைவுக் கட்டணம் ?
நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக டாஸ்மாக் பார்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. 14 வகையான நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலங்களுக்கு உள்ளிட்ட நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதன் எதிரொலியாக டாஸ்மாக் பார்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பார்கள் இயங்கி வருகின்றன. பார்களுக்கு வரும் மதுபிரியர்களுக்கு நெகிழி கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பொருட்களும் அரசு தடை செய்யப்பட்ட பட்டியலில் வருவதால், நெகிழி கப், தண்ணீர் பாக்கெட் விற்பனை மூலம் ஓரளவு பணம் கிடைத்து வந்த தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் டாஸ்மாக் பார்களில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கலாம் என அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. எனவே டாஸ்மாக் பார்களில் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பார் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.