எண்ணூர் | அனல்மின் நிலைய கட்டுமானப் பணியின்போது விபத்து.. 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு
சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப்பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல் மின் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென முகப்பு சரிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 9 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்கள் 8 பேர் வடமாநிலத் தொழிலாளர்கள் என்பதால், உடல்களை சொந்த ஊர் கொண்டு செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாயும், பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாயும் நிவாரண நிதி அறிவித்துள்ளனர்.