இங்கிலாந்தில் இருந்த வந்த வெள்ளைக்கார நம்மாழ்வார் !

இங்கிலாந்தில் இருந்த வந்த வெள்ளைக்கார நம்மாழ்வார் !

இங்கிலாந்தில் இருந்த வந்த வெள்ளைக்கார நம்மாழ்வார் !
Published on

தமிழின்பாலும், இயற்கை உணவின்பாலும் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவர் புதுச்சேரியில் இயற்கை விவசாயியாக மாறியுள்ளார்

தமிழர் கலாசாரத்தையும், தமிழர் உணவு மரபையும் உள்வாங்கிக் கொள்வதில் பலரும் அக்கறை காட்டாத நிலையில், எங்கிருந்தோ வந்த ஒருவர் அவற்றை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார்.  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது 19ஆவது வயதில் புதுச்சேரி அடுத்துள்ள ஆரோவில் சர்வதேச நகருக்கு வந்து சேர்ந்தார். தமிழின்பாலும், இயற்கை உணவின்பாலும் ஈர்ப்புகொண்ட அவர் தனது பெயரை கிருஷ்ணா என மாற்றிக் கொண்டார். அதோடு, தமிழ்ப் பெண்ணை மணந்து கொண்டு, தமிழ் மொழியையும் கற்றுக் கொண்டு, இயற்கை விவசாயத்தை கற்றுக் கொள்ளவும் செய்துள்ளார்.

ஆரோவில் நகரில் வாங்கிய 6 ஏக்கர் நிலத்தில் மா, பழா, வாழை, தென்னை, கொய்யா, பப்பாளி உள்ளிட்ட பழ வகைகளும், கத்தரிகாய், சுண்டைகாய், வெண்டைகாய் உள்ளிட்ட காய்கறி வகைகள், முருங்கை, பசலை, முளைக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள், துளசி, திப்பிலி, மணத்தக்காளி, முடக்கத்தான் உள்ளிட்ட மருத்துவ குணமுள்ள செடி வகைகளையும் கிருஷ்ணா வளர்த்து வருகிறார். 

இயற்கை விவசாயம் மூலம் இயற்கை உணவு தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கிருஷ்ணா. இயற்கை விவசாயம் குறித்து பேசிய அவர், ''தமிழ் கலாசாரம் எல்லாவற்றுக்கும் முன்னோடி. அனைத்துக்கும் முதன்மையானது என்று நினைக்கிறேன். மண் மட்டுமே மனித உலகுக்கு அடிப்படை ஆதாரம். நலமான வாழ்வுக்கு பணம் உதவாது, சத்தான உணவுகள் மட்டுமே உதவும். அதற்காகவே, இயற்கை வழியை நாடுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இவரது இயற்கை பண்ணையையும், உணவங்காடியையும் காண ஏராளமான வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர். அவர்களோடு, இயற்கை விவசாயத்தை விரும்பும் தமிழர்களையும் அங்கு காண முடிகிறது. நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் இவரை, வெள்ளைக்கார நம்மாழ்வார் என்றே உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com