அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..! பின்னணி என்ன?
திண்டுக்கலில் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன், மகள் வீடுகளில் சோதனை!
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் அபிராமபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் ரோஜா இல்லத்தில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு CRPF உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்எல்ஏ விடுதியில் அவரது அறையில் நான்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் CRPF வீரர்கள் பாதுகாப்போடு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஐ.பெரியசாமியின் மகனும் திண்டுக்கல் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் வீட்டிலும் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் திண்டுக்கல் கோவிந்தாபுரம், அசோக்நகர், வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டிலும் அமலாக்கதுறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையிட முயன்ற அதிகாரிகளை தடுத்த திமுகவினர்!
இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத்திற்கு அதிகாரிகள் சென்று சோதனை நடத்த முற்பட்டபோது அங்கிருந்த திமுக கட்சியினர் அதிகாரிகளை உள்ளே விடவில்லை பின்பு சுமார் 40 நிமிடங்கள் கழித்து CRPF வீரர்கள் வரவழைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கு பின்னணி
அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006-2011 காலக்கட்டத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.2 கோடியே 1 லட்சத்துக்கு 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி, மகன்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. அண்மையில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னாள் டி.ஜி.பி ஜாபர் சேட்டின் வீடு ஒதுக்கீடு வழக்கு
அதேபோல கடந்த 2006-11ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீட்டு வசதி துறை அமைச்சராக ஐ பெரியசாமி இருந்தார். அப்போது உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த முன்னாள் டிஜிபி ஜாபர் சேட்டுக்கு தமிழக அரசு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. அங்கு வர்த்தக நோக்கில் அடுக்குமாடு குடியிருப்பு கட்டி அதன் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாக ஜாபர் சேட் மீது 2011-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஜாபர் சேட் தனது மனைவி சமூக சேவகர் எனக் கூறி 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்றிருந்தார். பெசண்ட் நகர் கோட்டத்தின் திருவான்மியூர் புறநகர் திட்டத்தில் இந்த நில ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இதனிடையே அங்கு வர்த்தக நோக்கில் அடுக்குமாடு குடியிருப்பு கட்டி அதன் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாக ஜாபர் சேட் மீது 2011-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை கடந்த 2020 ம் ஆண்டு அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் கடந்த 2022 ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்மன் அளித்து விசாரணையில் அலுவலகம் வரவழைத்து சுமார் 9 மணி நேரம் விசாரணை செய்தனர். தற்போது அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது மகன் MLA செந்தில்குமார் மற்றும் மகள் தொடர்புடைய ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனையின் முடிவில் தான் சோதனைக்கான உண்மையான காரணமும் மேலும் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா வீடு ஒதுக்கீடு முறைக்கேட்டில் பணம் கை மாறியது எவ்வளவு என தெரியவரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.