அமைச்சர் பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம்... அமலாக்கத்துறை நடவடிக்கை
அமைச்சர் பொன்முடியின் ரூ. 14.21 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் பூந்துரை கிராமத்தில் செம்மண் குவாரியை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் அதிகளவு செம்மண் அள்ளிய விவகாரத்தில், அரசிற்கு ரூ. 28.31 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உயர்கல்வித்துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும் கைது செய்து விசாரணை நடத்தி இருந்தது. தற்போது அமைச்சர் பொன்முடி ஜாமீனில் வெளியில் இருக்கிறார்.
இந்நிலையில் அமலாக்கத்துறையானது தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவரது ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

