”சாமி.. என்னைய தெரியலையா..” - பஹ்ரைன் சென்ற மகனின் வரவுக்காக பாசப்போராட்டம் நடத்திய தாய்!

பக்ரைன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற மகன் விபத்தில் சிக்கிய நிலையில், தாயின் நான்கு மாதகால போராட்டத்திற்குப் பிறகு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
Mother
Motherpt desk

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பையா - அழகி தம்பதியர் இவர்களுக்கு வீரபாண்டி (25), அழகு பெருமாள் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பையா, கட்டட வேலை செய்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. அதனால் அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

குடும்ப வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து முடித்த வீரபாண்டி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பக்ரைன் சென்று அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் கீப்பராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி பணி முடித்து அவர் தங்கியிருக்கும் அறைக்கு செல்லும்போது கனரக வாகனம் அவர் மீது மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் பக்ரைன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து விபத்து குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர் தங்களது மகனை எப்படியாவது சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என முடிவு செய்தனர். ஆனால், அவரை சென்னைக்கு அழைத்து வர கையில் பணம் இல்லாததால் செய்வதறியாது தவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து வெளிநாடுவாழ் தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் மூலம் தகவல் தெரிவித்து, தன் மகனை எப்படியாவது சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் 4 மாத போராட்டத்திற்குப் பிறகு விமானம் மூலம் வீரபாண்டியை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது தன் மகனைப் பார்க்க அவரது தாயார் அழகி பதறி அடித்து ஓடிவந்து தன் மகனை கட்டி அணைத்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. அதன் பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வீரபாண்டியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com