வாகனங்களை விரட்டும் யானைகள் - பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
சத்தியமங்கலம் அருகே வாகனங்களை துரத்தும் யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோர வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் பகல் நேரங்களில் சுற்றித்திரிகின்றன. யானைகள் சாலையோரம் நிற்பதைக் காணும் வாகன ஓட்டிகள் யானையின் அருகே நின்று செல்போனில் படம் பிடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் யானைகள் வாகனத்தை துரத்துகின்றன. இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் சாலையில் நான்குக்கும் மேற்பட்ட யானைகள் சாலையோரம் நின்றிருந்தன.
அப்போது அவ்வழியே சென்ற சரக்கு வாகனத்தை யானை கூட்டத்தில் இருந்த ஒற்றை யானை துரத்திக்கொண்டு சாலையின் நடுவே ஓடிவந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டுனர் வாகனத்தை வேகமாக இயக்கி யானையிடம் இருந்து தப்பினார். யானைகள் தற்போது சாலையோரம் நிற்பதால் வாகனங்களை அருகில் நிறுத்தும்போது யானைகள் கோபத்தோடு துரத்தி தாக்க முயற்சிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறும், யானைகள் நிற்கும் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.