இறந்த குட்டியை பிரியாமல் நிற்கும் தாய் யானை - கண்ணீர் வரவழைக்கும் பாசப் போராட்டம்..!

இறந்த குட்டியை பிரியாமல் நிற்கும் தாய் யானை - கண்ணீர் வரவழைக்கும் பாசப் போராட்டம்..!
இறந்த குட்டியை பிரியாமல் நிற்கும் தாய் யானை - கண்ணீர் வரவழைக்கும் பாசப் போராட்டம்..!

கூடலூர் அருகே இறந்த குட்டி யானையை விட்டு இரண்டு நாட்களாகத் தாய் யானை விலகிச் செல்லாமல் இருந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பள்ளிப்படி பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் நேற்று 3 காட்டு யானைகள் ஒரே இடத்தில் நிற்பதைத் தொழிலாளர்கள் கண்டனர். இதுதொடர்பாக வனத்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கே குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இறந்த குட்டி யானையை விட்டு தாய் மற்றும் மேலும் இரண்டு யானைகள் விலகாமல் நின்றுகொண்டிருப்பதும் தெரியவந்தது.

இறந்த குட்டியை வனத்துறையினர் அருகில் சென்று பார்க்க முயன்ற போது, மூன்று யானைகளும் அவர்களைத் துரத்தியுள்ளன. இதனால் நேற்று குட்டி யானையை மீட்கும் முயற்சியை வனத்துறையினர் கைவிட்டுத் திரும்பினர். இதைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் வனத்துறையினர் குட்டி யானையை மீட்கச் சென்றனர். அப்போது குட்டியின் அருகே நின்ற தாய் யானை, யாரையும் நெருங்க விடாமல் விரட்டியது.

இதனால் இரண்டாவது நாளாக இறந்த குட்டியை மீட்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். அத்துடன் தாய் யானை தானாக விலகிச் செல்லும் வரை அதனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். மேலும், யானையைக் கண்காணிக்க இரண்டு வனத்துறை பணியாளர்களை நியமித்துள்ளனர். குட்டி யானை இறந்ததை ஏற்க முடியாமல் தாய் யானை அங்கேயே இருப்பது காண்போரைக் கலங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com