கோவை மேட்டுபாளையம் அருகேயுள்ள தேக்கப்பட்டியில் நாளை முதல் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள யானைகளுக்கு நலவாழ்வு புத்துணர்வு முகாம் மேட்டுபாளையம் அருகே உள்ள பவானி ஆற்று படுகையில் உள்ள தேக்கப்பட்டியில் நாளை துவங்கி பிப்.20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள 9 யானைகளும் பங்கேற்கின்றன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை சேர்ந்த 22 வயதான தெய்வானை யானையும் கலந்து கொள்கிறது. இதற்காக தெய்வானை திருச்செந்தூரிலிருந்து தேக்கப்பட்டி முகாமிற்கு நேற்று மாலையில் புறப்பட்டுச் சென்றது.
இதேபோல நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, தென்காசியை அடுத்த இலஞ்சி திருவிலஞ்சி குமாரர் கோயில் யானை வள்ளிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கனரக வாகனத்தில் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோயில் யானை புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டுச் சென்றது. யானைக்கு சிறப்பு பூஜை நடத்தி யாத்திரீகர்கள் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் வழியனுப்பிவைத்தனர்.