முழுவதுமாக இடிக்கப்பட்ட யானைக்கவுனி மேம்பாலம் !
சென்னை வால்டாக்ஸ் சாலை மற்றும் ராஜா முத்தையா சாலைகளை இணைக்கும் வகையிலிருந்த யானைக்கவுனி பாலம் முழுவதுமாக இடிக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேக்கு சொந்தமான இந்தப் பாலத்தின் இரண்டு புறமும் உள்ள சேவை சாலைப் பகுதியை மட்டுமே, மாநகராட்சி பராமரித்து வந்தது. இந்நிலையில், பழமை வாய்ந்த யானைக்கவுனி பாலம் மிகவும் பழுதடைந்ததால், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகக் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு ரயில்வே துறை மற்றும் போக்குவரத்துத் துறை தடை விதித்தது. இதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.
மூலக்கொத்தளம் பாலத்திலிருந்து, வியாசர்பாடி, மணலி, மாதவரம், ரெட்ஹில்ஸ், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் யானைக்கவுனி பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசு அறிவித்தது.
இதற்கிடையே தெற்கு ரயில்வே சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 50 சதவிகித நிதி பங்களிப்புடன் ரூ. 30 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்பட இருக்கிறது. புதிதாக 100 மீட்டர் நீட்டிக்கப்படவுள்ள பகுதியில் பாலம் அமைக்கும் பணி முற்றிலும் ரயில்வே துறை நிதி மூலமும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்தப் பாலத்தின் கீழ் தண்டவாள பாதைகளைக் கூடுதலாக, 47 மீட்டரிலிருந்து 150 மீட்டருக்கு நீட்டிக்க தெற்கு ரயில்வே தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் யானைக்கவுனி பழைய பாலத்தை இடிக்கும் பணி ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கியது. பாலத்தை இடிக்கும் பணியில், 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். கிரேன் இயந்திரங்கள், கட்டிங் இயந்திரங்கள் பயன்படுத்தி, பாலத்தைத் துளையிட்டு இடிக்கும் பணிகள் வேகமாக நடந்து வந்தது.
இந்நிலையில் பாலம் முழுவதுமாக இன்று இடிக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஊரடங்கைப் பயன்படுத்தி இந்தப் பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. வழக்கமான நாட்களில் இடித்தால் ரயில்கள் இயக்கம் பல நாட்கள் தடைப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழைய மேம்பாலம் தற்போது இடிக்கப்பட்டு விட்டது. விரைவில் புதிய பாலம் நவீன வசதிகளுடன் கட்டப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.