மழையில் சறுக்கி அகழியில் விழுந்த யானை - பரிதாபமாய் உயிரிழப்பு
பொள்ளாச்சியில் அகழியை கடக்க முயன்ற போது தவறி விழுந்து ஆண் காட்டு யானை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சரளபதி கிராமத்தில் அகழி ஒன்று உள்ளது. இந்த அகழியில் சிக்கிய யானை ஒன்று பரிதாபமாய் இறந்து கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி வருத்தமடைந்தனர். பின்னர் பொள்ளாச்சி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அகழியில் இறந்துகிடந்த யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த யானைக்கு 30 வயதிருக்கும் எனக் கூறப்படுகிறது. நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து மேய்ச்சலுக்கு வந்த யானை, மழை பெய்யும் போது அகழியை கடக்க முயன்றுள்ளது. அப்போது அகழியில் சறுக்கி விழுந்து தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த அடிபட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல்கூறு ஆய்வு முடிந்த பின்னர் யானையின் உடல் வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் மாமிசத்திற்கு விடப்படும் என வனத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து ஒரே ஆண்டில் ஒரு பெண் யானை உட்பட நான்கு யானை இதுபோன்று உயிரிழந்திருப்பது வனத்துறையினர் மத்தியிலும், வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.