உணவின்றி 100கிமீ பயணித்ததால் மயங்கி விழுந்தது சின்னத்தம்பி
100 கிலோமீட்டருக்கு மேல் உணவின்றி சுற்றித்திரிந்ததால் திருப்பூர் மடத்துக்குளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சின்னத்தம்பி யானை மயங்கி விழுந்தது.
கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னத்தம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னத்தம்பி யானை கொண்டு செல்லப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர்.
ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னத்தம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது.
கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள தென்னந்தோப்புகளில் புகுந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. சின்னத்தம்பி உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் உதவியுடன் யானையின் இருப்பிடத்தை வனத்துறையினர் பின் தொடர்ந்து வந்தனர்.
இன்று காலை சின்னத்தம்பி உடுமலை அருகே தஞ்சமடைந்தது. வாழிடத்தை தேடி கடந்த 3 நாட்களில் 100 கிலோமீட்டருக்கும் மேலாக சின்னத்தம்பி நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சின்னத்தம்பி உணவின்றியே சுற்றிவருவதாக கூறப்படுகிறது. இதனால் களைப்படைந்த காட்டுயானை திருப்பூர் மடத்துக்குளம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் மயங்கி விழுந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வனத்துறையினர், யானை உணவு, தண்ணீரின்றி சுற்றி வருவதால் உடலளவிலும், மனதளவிலும் சோர்வடைந்துள்ளது. அதனால் படுத்து உறங்கி ஓய்வெடுக்கிறது. அது மயங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
யானை சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்தினால் கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.