கோவை மாவட்டத்தில், காயங்களுடன் உயிருக்குப் போராடும் தாய் யானையைப் பிரியாமல், குட்டி யானை சுற்றி வருவது பார்ப்போரை கலங்கச் செய்துள்ளது.
பெரிய நாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட குஞ்சூர்பதி கிராமத்தில் குளத்தில் சிக்கிய பெண் யானை கடும் போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டது. இரண்டு பெண் யானைகள் ஒரு குட்டி யானையுடன் குளத்தில் தண்ணீர் குடிக்க வந்த போது 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று சேற்றில் சிக்கியது. யானையின் முகம் முழுவதும் நீரில் மூழ்கிய நிலையில், தும்பிக்கை மட்டும் நீரின் மேல் பகுதியில் இருந்திருக்கிறது. அந்த யானையை மீட்க அதனுடன் வந்த மற்றொரு யானையும், குட்டி யானையும் தொடர்ந்து முயன்றன. அந்தச் சத்தம் கேட்டு கிராம மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் வெடி வெடித்து குளத்தைச் சுற்றி வந்த இரு யானைகளையும் விரட்டினர். பின்னர் பொக்லைன் வாகனத்தைக் கொண்டு சேற்றிலிருந்து யானையை மீட்டனர். யானைக்கு உடல் நலம் பாதிக்கப்படிருப்பதால், வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மற்ற இரு யானைகளும் பாதிக்கப்பட்ட யானையை விட்டு அகலாமல் அங்கேயே சுற்றி வருகின்றன. குட்டி யானை, தாயைச் சுற்றி வருவது, காண்போரைக் கலங்கச் செய்துள்ளது.