லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்த காட்டு யானை – அச்சமடைந்த வாகன ஓட்டிகள்
தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்து கரும்புத் துண்டுகளை நொறுக்கித் தள்ளிய காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்புகளை அறுவடை செய்து லாரிகளில் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தாளவாடியில் இருந்து கரும்பு ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்ததால் வாகன ஓட்டுநர் அச்சமடைந்து லாரியை சாலையின் நடுவே நிறுத்தினார்.
இதையடுத்து காட்டு யானை லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்பு துண்டுகளை தனது தும்பிக்கையால் பறித்து சுவைத்தது. காட்டு யானை லாரியை வழிமறித்ததால் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அப்போது வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் காட்டு யானையின் அருகே சென்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க முயன்றனர்.
சிறிது நேரம் கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை பறித்துத் தின்ற காட்டுயானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.