திடீர்னு மின் கட்டணம் அதிகமாக வருகிறதா? கூடுதல் தொகை நிர்ணயமா? - இதுவும் கூட காரணமாக இருக்கலாம்!

வீட்டு உபயோக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு கூடுதல் வைப்பு தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டு வருவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
tneb
tnebpt desk

தமிழகத்தில் பலருக்கு அண்மைக்காலமாக கூடுதலாக மின் கட்டணம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஒரு கட்டணமும் சில நாட்கள் கழித்து கூடுதல் கட்டணமும் நிர்ணயிக்கப்படுவது நுகர்வோரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக மின்சார வாரியம் புதிய மின் இணைப்பு வழங்கும்போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து பதிவு கட்டணம், வைப்புத் தொகை, வளர்ச்சி கட்டணம் என பல வகைகளில் கட்டணம் வசூலிக்கிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி வைப்புத்தொகை, தொழிற்சாலைகளுக்கு ஓராண்டுக்கு ஒரு முறையும் வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி மின் இணைப்பு பெறும்போது குறிப்பிட்டிருந்ததை விட அதிக மின்சாரம் பயன்படுத்துவோரிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு தாழ்வழுத்த பிரிவில் அதிக மின்சாரம் பயன்படுத்திய வகையில் 36 லட்சம் வீடுகளில் 500 கோடி ரூபாய் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்க திட்டமிடப்பட்டது. அது பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. அந்த திட்டம்தான் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே பலருக்கு கூடுதல் மின் கட்டணம் வர காரணம்.

இந்த அறிவிப்பு மின்சாரம் வேண்டி விண்ணப்பிக்கும் போது தெரிவித்த மின் உபயோகத்தை காட்டிலும் கூடுதலாக உபயோகம் செய்வதற்கு மட்டுமே பொருந்தும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த டெபாசிட் கட்டணம் கடைசி ஓராண்டில் பயன்படுத்திய மின்சார கட்டணத்தின் சராசரியை கணக்கிட்டு வசூலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையே மின் கட்டணம் மீண்டும் உயர்வதாக தகவல்கள் பரவி வருவதும் ஏழை, நடுத்தர மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது, இந்நிலையில் மின் கட்டணத்தில் மாற்றம் இருக்குமா அல்லது இப்போதைய அளவிலேயே நீடிக்குமா என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் அறிவிக்கும் என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாக கூடும் என்றும் மின்வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன.

- செய்தியாளர் ரமேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com