புயல் பாதிப்பால் தடையான மின்சாரம் - பைக் பேட்டரியில் போன் சார்ஜ்
‘கஜா’ புயல் பாதிப்பால் மின்சாரம் தடைப்பட்டுள்ள நேரத்தில் பைக் பேட்டரி மூலம் தஞ்சையில் ஒருவர் போனுக்கு சார்ஜ் செய்து வருகிறார்.
‘கஜா’ புயல் பாதிப்பால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின் இணைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தங்கள் பகுதிக்கு அவசர உதவி தேவைப்படும் நேரத்தில், அரசின் அவசர கட்டுப்பாட்டு எண் அல்லது ஆம்புலன்ஸ் சேவையை கூட அழைக்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.
மின்சாரம் இல்லாததால் போன்களுக்கு சார்ஜ் போட முடியாத காரணத்தினாலேயே இந்தத் துயர நிலை ஏற்பட்டுள்ளது. பலர் வெளியூரிலிருக்கும் தங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு சார்பில் இலவச அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டாலும், தொலைபேசியில் சார்ஜ் இருந்ததால் தானே அதனை தொடர்பு கொள்ள முடியும்
என்பது மின்சார சேவை முடங்கிய பகுதிகளின் மக்கள் குரலாக உள்ளது.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பைக் பேட்டரி மூலம் சென்போன்களை சார்ஜ் செய்து வருகிறார். பைக் பேட்டரில் டிசி சார்ஜர் ஒன்றை அவர் பொருத்தியுள்ளார். அதில் ஆன் மற்றும் ஆஃப் சுவிட்ச் ஒன்று உள்ளது. அந்த சுவிட்சை ஆன் செய்த பிறகு, செல்போனை அதில் சார்ஜ் போட்டுவிட்டு, பைக்கை ஸ்டார்ட் செய்தால் போனுக்கு சார்ஜ் ஏறுகிறது. இருசக்கர வாகனத்தில் எங்காவது செல்லும் போது, சார்ஜ் போட்டுவிட்டு சென்றால் பேட்டரின் அது சார்ஜ் நிரம்பிவிடும்.
இதுதொடர்பாக கூறும் அந்த நபர், “மின்சாரம் இல்லாத நேரத்தில் இந்த சார்ஜர் மிகவும் உதவியாக உள்ளது. மெக்கானிக் சர்வீஸ் விலையுடன் சேர்த்து இதற்கு ரூ.210 தான் ஆகிறது. இதன்மூலம் இருசக்கர வாகனம் வைத்திருப்பதவர்கள் அனைவரும் பயனடைய முடியும். எளியமையாக இதை அனைவரும் வாங்கி வைத்துக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கிறார்.