
தேர்தல் காலம் என்பது அரசியல் கட்சிகளை கொதிநிலையின் உச்சத்தில் வைத்திருக்கும் அரசியல் அக்னி நட்சத்திரமே. தேர்தல் நெருங்கும் தருவாயில் தொடங்கி முடிவுகள் வெளியாகும் வரையில் ஒரு வகையில் ரத்த அழுத்த மனநிலையிலேயே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருப்பார்கள். கொஞ்சம் அதீதமாக இந்த உவமை தோன்றினாலும் அந்த திக் திக் நகர்வுகளை வர்ணிக்க பொறுத்தமான வார்த்தைகளை பிறகு பிடித்துக் கொள்ளலாம்.. ஆட்சியை பிடிப்பதற்கான மிகப்பெரிய சதுரங்க ஆட்டம் அங்கே அரங்கேறிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு தரப்பும் தங்களுடைய காய்களை நகர்த்தி இறுதி செக் மேட்டிற்காக காத்துக் கொண்டிருப்பார்கள்.
தற்போது, ஆட்சியில் இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆனது ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பிலும், எதிர்க்கட்சியாக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பிலும் டன் கணக்கில் வியூகங்களை வகுத்து 2026 தேர்தலை நோக்கிய பாய்ச்சலில் இருக்கிறது. அக்டோபர் மாத நிலவரப்படி பார்த்தால் பெரும்பாலும் திமுக மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் அடித்துச் சொல்கிறார்கள். ஆனாலும், நம்பிக்கையை கைவிடாமல் பம்பரமாக களத்தில் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்னொருபுறம் தவெக மற்றும் நாதக இருக்கின்றன. தேர்தல்களை பொறுத்தவரை கணிப்புகளை தாண்டி பல்வேறு காரணிகள் வெற்றி தோல்வியில் அங்கம் வகிக்கும்.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் தொடக்க காலம் முதலே ஸ்வீப் ஆக தான் இருந்து வந்திருக்கிறது. ஒன்று இந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான காரணங்கள் இருக்கும். இன்னொன்று இந்தக் கட்சி ஆட்சிக்கு வரக் கூடாது என்ற எதிர்ப்பு அலை இருந்திருக்கும். சில நேரங்களில் கூட்டணி கட்சிகளின் தாக்கம் இருக்கும். சில தேர்தல்களில் மூன்றாவது தரப்பினரின் தாக்கம், யாரோ ஒரு கட்சியின் வெற்றிக்கும் மற்றொரு கட்சியின் தோல்விக்கும் வழிவகுக்கும். ஒவ்வொரு தேர்தல்களாக தீர்மானிக்கும் காரணிகளாக என்னென்ன இருந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்றது. பெரும்பாலும் எல்லா இடங்களிலும் காங்கிரஸ் கட்சியே சட்டமன்ற தேர்தல்களில் வென்று ஆட்சியை பிடித்தது. ஒரே காரணம் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற அமைப்பு என்ற மிகப்பெரிய பலம் காங்கிரஸ் வசம் இருந்தது. தமிழ்நாட்டில் 1952, 57, 62 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் வென்று காங்கிரஸ் கட்சியே ஆட்சி பீடத்தில் இருந்தது. 1952 தேர்தலில் காங்கிரஸ் 34 சதவீதம் வாக்குகளுடன் 152 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 13 சதவிதம் வாக்குகளுடன் 62 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. என்னதான் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தாலும் அது எளிதாக நடந்துவிடவில்லை. பெரும்பான்மை கிடைக்காமல் நீண்ட போராட்டத்திற்கு பிறகே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
இரண்டாவது சட்டமன்ற தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வில்லனாக திமுக வந்து தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடத்தை திமுக பறித்துக் கொண்டது. 151 இடங்களுடன் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி வாகை சூடினாலும் முதல் தேர்தலிலேயே 15 இடங்கள் வென்று காங்கிரஸுக்கு திமுக பயம் காட்டியது. வெறும் 4 இடங்களுடன் கம்யூனிஸ்ட் கட்சி சுருங்கிவிட்டது. இந்த தேர்தலில் காமராஜருக்கு பெரியார் ஆதரவு தெரிவித்து இருந்தார்.
1962 தேர்தலில் திமுக பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. 139 இடங்களுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும் திமுக 50 இடங்களில் வென்று தேர்தல் வெற்றியில் அடுத்த பாய்ச்சலை தொட்டது. இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (10%), முத்துராமலிங்க தேவரின் பார்வட் பிளாக், காங்கிரஸில் இருந்து பிரிந்து ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சி ஆகியவை முக்கிய பங்கி வகித்தது. இந்த முறையும் காமராஜரை பெரியார் ஆதரித்தார். திமுகவை கடுமையாக எதிர்த்தார்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக மாநிலக் கட்சி ஆட்சியைப் பிடித்த வரலாறு நடந்தது. 179 இடங்களுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது திமுக கூட்டணி. 51 இடங்களுடன் சுருங்கியது காங்கிரஸ் கட்சி. இந்தி எதிர்ப்பு போராட்டம் எனும் மிகப்பெரிய அலை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக வீசியது அதன் தோல்விக்கு முக்கியமான காரணமாக இருந்தது. அதேபோல், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நெருக்கடிகள் தமிழ்நாட்டில் நிலவியது. குறிப்பாக அரிசி விலை அதிகமாக இருந்தது. ’மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம்’ என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்தது திமுக.
பக்தவச்சலம் ஆட்சிக்கு எதிராக கொந்தளிப்பாக அலை வீசியதை திமுக பயன்படுத்திக் கொண்டது. மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த திமுக வெற்றி வாகை சூடியது. இன்னொன்று அண்ணா எனும் வசீகர தலைவர் தமிழ்நாட்டை ஆட்கொண்டுவிட்டார். யாரை சித்தாந்த ரீதியாக திமுக எதிர்த்ததோ அந்த ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனே கூட்டணி அமைத்ததுதான் விநோதம். திமுக கூட்டணி 52.59 சதவீதம் வாக்குகளை பெற்றது. காங்கிரஸ் 41.10 சதவீதம் வாக்குகளை பெற்றது. இதுதான் மிகப்பெரிய அலை தமிழ்நாட்டில் முதல் முதலாக வீசிய தருணம்.
அண்ணாவின் மறைவுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல். திமுக கலைஞர் கருணாநிதியின் கைகளுக்கு சென்றது. 1971 தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக 53.99 சதவிதம் வாக்குகளுடன் 205 இடங்களில் வென்று வரலாறு படைத்தது. ஸ்தாபன காங்கிரஸ் (காமராஜர் பிரிவு) வீழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று 21 இடங்களில் மட்டுமே வென்றது. எப்படி ராஜாஜியை அண்ணா கூட்டணியில் கொண்டு வந்தாரோ, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியையே கருணாநிதி கூட்டணிக்குள் கொண்டு வந்தார். ஆம், இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என பிரிந்துவிட்ட காங்கிரஸில் இந்திரா தரப்பு காங்கிரஸை கூட்டணிக்குள் கொண்டு வந்தார். அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக், முஸ்லீம் லீக் உள்ளிட்ட 7 கட்சிகளுடன் களமிறங்கி மொத்தத்தை தட்டி தூக்கியது திமுக. கடந்த தேர்தல் வரை திமுகவை எதிர்த்து காமராஜருக்கு ஆதரவு தெரிவித்து வந்த பெரியார் இந்த தேர்தலில் திமுகவை ஆதரித்தார். இந்த தேர்தலில் காமராஜர் உடன் கைகோர்த்தார் ராஜாஜி.
திமுக இரண்டாக உடைந்து எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக என்ற கட்சி உருவானது. அதிமுகதான் சந்தித்த முதல் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1977 தேர்தலில் 144 இடங்களுடன் அதிமுக வெற்றி பெற திமுக 48 இடங்களையே பெற்றது. இந்த தேர்தல்தான் தற்போது வரை நிலவி வரும் திமுக Vs அதிமுக என்ற நேர் எதிர் துருவ போட்டியை துவங்கி வைத்தது. திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தே எம்ஜிஆர் பிரிந்து வந்தார். எம்.ஜி.ஆர் மீதான திரை கவர்ச்சி மற்றும் திமுகவில் இருந்து பிரிந்து வந்த தலைவர்கள் இவையெல்லாம் அதிமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். நெடுஞ்செழியன், சத்யவானி முத்து (பட்டியலின முகம்) உள்ளிட்ட பலரும் திமுகவை விட்டு வெளியேறினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வட் பிளாக், முஸ்லீம் லீக், கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. இருப்பினும் அதிமுகவே 200 இடங்களில் போட்டியிட்டது. எம்.ஜி.ஆரின் வசீகரமே இந்த வெற்றிக்கு பிரதான காரணம்.
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அதிமுக அசைக்க முடியாத தருணமாக மாறியது. 162 இடங்களுடன் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக வெற்றி வாகை சூடியது. திமுக 69 இடங்களை மட்டுமே பிடித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது திமுக. அதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், பார்வட் பிளாக் மற்றும் காந்தி காமராஜர் கட்சி ஆகியவற்றுடன் களமிறங்கியது. எமர்ஜென்சி அறிவிப்பின் காரணமாக நாடு முழுவதுமே காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி கிட்டினாலும், தமிழ்நாட்டில் எம்ஜிஆர் எனும் வசீகரத்தால் காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது.
அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிட்டிய தேர்தல் இது. இந்த தேர்தலில் அதிமுக 195 இடங்களிலும், திமுக வெறும் 34 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று எம்.ஜி.ஆரின் உடல்நிலை. மற்றொன்று இந்திரா காந்தி படுகொலையின் அனுதாபம். காங்கிரஸ் கட்சி இந்த முறை அதிமுக உடன் இருந்தது. 53.87 சதவித வாக்குகளை பெற்றது அதிமுக கூட்டணி. திமுகவுக்கு 37 சதவித வாக்குகள் கிடைத்தன.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல். 150 இடங்களுடன் திமுக ஆட்சியை பிடிக்க, ஜெயலலிதா தரப்பு அதிமுக 27 இடங்களுடன் எதிர்முனையில் இரண்டாவதாக வந்தது. இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் நிலவிய குழப்பங்கள் அக்கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மார்க்சிஸ்ட், ஜனதா தள் கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தது திமுக. இந்திய கம்யூனிஸ்ட் உடன் களமிறங்கியது ஜெயலலிதா தரப்பு அதிமுக. தோற்றாலும் கிட்டதட்ட கட்சி ஜெயலலிதா வசம் வந்துவிட்டதை இந்த தேர்தல் உணர்த்தியது.
அதிமுக ஜெயலலிதா வசம் வந்த பின் நடைபெற்ற தேர்தல். அதேபோல், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பிரதமர் சந்திர சேகர் தலைமையிலான அன்றையை காங்கிரஸ் அரசு திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தசெய்த பின் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 225 இடங்களுடன் தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது அதிமுக கூட்டணி. திமுகவுக்கு வெறும் 7 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 59 சதவிதம் வாக்குகளை பெற்றது அதிமுக கூட்டணி. திமுக கூட்டணிக்கு 30.5 சதவிதம் வாக்குகளே கிடைத்தன. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை மிகப்பெரிய அங்கம் வகித்தது.
ஆம். இந்த முறை அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது. அதனால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அனுதாப அலை வீசியது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், டி.ராஜேந்தரின் தாயக மறுமலர்ச்சி கழகம், ஜனதா தள் கட்சிகளுடன் திமுக தேர்தலை சந்தித்த போதும் படுதோல்வியை சந்தித்தது.
திமுக வரலாற்றில் சாதனை வெற்றி படைத்த தேர்தல். ஆம் 221 இடங்களை வென்று அபார வெற்றி பெற்றது திமுக கூட்டணி. அதிமுகவுக்கு வெறும் 4 இடங்கள் மட்டுமே கிடைத்தது. திமுக கூட்டணிக்கு 60.77 சதவிதம் வாக்குகள் கிடைத்தது. அதிமுகவுக்கு 27.08 சதவிதம் வாக்குகள் கிடத்தது. இந்த தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாவர்ட் பிளாக் கட்சிகளுடன் திமுக தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக தேர்தலை சந்தித்தது.
இந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசியது. ஊழல் குற்றச்சாட்டுகள் அதிக அளவில் வந்தது. ஆட்சி முறையிலும் அதிருப்தி இருந்தது. வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணமும் மிகப்பெரிய அளவில் எதிர்மறையாக பேசப்பட்டது. இந்த தேர்தலில் மற்றொரு சுவாரஸ்யமாக திமுக - தமாக கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார். இதுவும் திமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு வகித்ததாக பேசப்ப்ட்டது.
மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 196 இடங்களை பிடித்து அபார வெற்றி பெற திமுக கூட்டணிக்கு 37 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இந்த முறை மிகப்பெரிய கூட்டணியை அமைத்தார் ஜெயலலிதா. ஆம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், பார்வர்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து திமுகவின் கனவை கலைத்தார் ஜெயலலிதா.
இந்த தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லியது. கருணாநிதியும் தலைவராக மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு தோல்வியை கொடுத்தது. பாஜக உடன் திமுக கூட்டணி அமைத்ததும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த தேர்தல் இது. கூட்டணியாக 163 இடங்களுடன் திமுக வெற்றி பெற்ற போதும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. அதிமுக 69 இடங்கள் பிடித்தது. திமுக கூட்டணி 44.75 சதவிதமும், அதிமுக கூட்டணி 40.1 சதவிதம் வாக்குகளும் பெற்றன. கடந்த முறை கோட்டை விட்டதை இந்த முறைபிடித்தார் கருணாநிதி. மிகப்பெரிய கூட்டணியை அமைத்தார். ஆம், காங்கிரஸ், பாமக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சி பாரதம் கட்சி, பார்வர்ட் பிளாக் ஆகியவற்றுடன் மெகா கூட்டணி அமைத்தது திமுக. அதிமுகவோ, மதிமுக, விசிக, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் சில அங்கீகரிக்கப்படாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. 8 சதவீதம் வாக்குகளுடன் தேமுதிக களத்தில் தனித்து நின்றது.
இந்த தேர்தலில் 203 இடங்களுடன் அதிமுக கூட்டணி ஸ்வீப் அடித்தது. திமுக கூட்டணிக்கு 31 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுகவின் வெற்றிக்கு வித்திட்டது. கடைசி வரை திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுவதுபோல் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஜெயலலிதா முந்திக் கொண்டார். அத்துடன் 2ஜி வழக்கு விவகாரம் மற்றும் திமுக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலையும் அன்று வீசியதும் அதன் தோல்விக்கு காரணங்களாக அமைந்தன. அதிமுக கூட்டணிக்கு 51.93 சதவிதமும், திமுக கூட்டணிக்கு 39.50 சதவிதம் வாக்குகளும் கிடைத்தன.
1989 ஆம் ஆண்டிற்கு பிறகு திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தது. ஒரு முறை அதிமுக என்றால் அடுத்த முறை திமுக, ஒரு முறை திமுக என்றால் அடுத்த முறை அதிமுக. அதனால், இந்த முறை திமுக வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 136 இடங்களுடன் அதிமுக ஆட்சி அமைக்க, 98 இடங்களுடன் திமுக மீண்டும் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இந்த எதிர்பாராத திருப்பத்திற்கு காரணமாக மக்கள் நல கூட்டணி அமைந்தது. ஆம், தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமாக இணைந்து மக்கள் நல கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுக 40, திமுக 39 சதவிதம் வாக்குகள் பெற்றன. ஒரு சதவிதம் தான் வித்தியாசம். மநகூ பிரித்த 6 சதவீதம் வாக்குகளே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. மிகப்பெரிய கட்சிகள் எதுவும் இல்லாமல் 227 இடங்களில் போட்டியிட்டு அதிமுக வெற்றி வாகை சூடியது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்டவற்றுடன் தேர்தலை சந்தித்த போதும் திமுகவால் கரை சேர முடியவில்லை.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல். அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் நிலவியது. அதேபோல், திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல். 159 இடங்களுடன் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை மக்கள் நலக் கூட்டணியில் இடம்பிடித்த கட்சிகளில் தேமுதிக, தமாக தவிர அனைத்து கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றன. காங்கிரஸ்க்கு 25 இடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அதிமுக பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தேர்தலை சந்தித்தது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி 45 சதவிதம் வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 39 சதவிதம் வாக்குகளும் கிடைத்தன. முதல்வர் ஸ்டாலின் கச்சிதமாக அமைத்த கூட்டணி கணக்குகளும், அதிமுகவின் கட்சிக் குழப்பங்களும் திமுக கூட்டணி வெற்றிக்கு வழிவகுத்தது.
தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தல்களில் பெரும்பாலும் நிறைய கட்சிகள் ஸ்வீப் அடித்துள்ளார்கள், யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும், யாரை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளார்கள் என்பது தெரிகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டம், ராஜிவ் காந்தி படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் தேர்தல் களத்தில் எதிரொலித்து இருக்கின்றன. திமுக, அதிமுக இரு கட்சிகளின் மீதும் ஆட்சியில் இருந்த போது எதிர்ப்பு அலைகளும் வீசி இருக்கின்றன. அதேபோல், தேமுதிகவின் வளர்ச்சி, மநகூ அமைப்பு போன்றவையும் தேர்தல் களத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கின்றன. காமராஜர் போன்ற சுதந்திர போராட்ட பின்னணி கொண்ட தலைவர்கள் மற்றும் கட்சியின் தாக்கம், அண்ணாவின் அரசியல் ஆளுமை, எம்.ஜி.ஆரின் திரைக்கவர்ச்சி, கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் கூட்டணி கணக்குகள் போன்ற பல விஷயங்கள் தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
2026 சட்டமன்ற தேர்தலில் என்னவெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...