தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: நோட்டாவை விட குறைந்த வாக்குகளைப் பெற்ற தேமுதிக!

தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: நோட்டாவை விட குறைந்த வாக்குகளைப் பெற்ற தேமுதிக!
தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: நோட்டாவை விட குறைந்த வாக்குகளைப் பெற்ற தேமுதிக!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக கடும் தோல்வியை சந்தித்துள்ளது. நோட்டாவைக் காட்டிலும் குறைந்த வாக்கு சதவிகிதத்தை தேமுதிக இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் சேர்ந்து தேமுதிக களம் கண்டது. 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக தேமுதிக தலைவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலத்தில், முதல் முறையாக களமிறங்கிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், டெபாசிட் இழந்துள்ளார். இதே போல மற்ற பல தேமுதிக வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தேமுதிக இந்தத் தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் கடந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு பூஜ்ஜியம் புள்ளி நான்கு விழுக்காடாக சரிந்துள்ளது.

2005 ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட பின்னர், 2006ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் தேமுதிக தனித்துக் களம் கண்டது. அப்போது விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றார். மற்ற தொகுதிகளில் வெற்றி கைகூடாவிட்டாலும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 8.4விழுக்காடு வாக்குகளை தேமுதிக பெற்றது.

இதையடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் தனித்துக் களம் கண்ட தேமுதிக வெற்றியடையாவிட்டாலும், 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்று பெரிய கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

இதனால் 2011-ல் தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அப்போது 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேமுதிக, 7.9விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமகவுடன் தேமுதிக களம் கண்டதில் வெற்றி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வாக்கு சதவிகிதமும் 5.1 விழுக்காடாகக் குறைந்தது.

இதையடுத்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்துப் போட்டியிட்ட தேமுதிகவின் வாக்கு விகிதம் 2.41 விழுக்காடாக குறைந்தது. பின்னர் 2019 மக்களவைத் தேர்தலில் 2.19 சதவிகிதமாகக் குறைந்த தேமுதிகவின் வாக்கு சதவிகிதம், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 0.43சதவிகிதமாக கடும் சரிவை சந்தித்துள்ளது. அதிலும், நோட்டாவைக் காட்டிலும் தேமுதிக குறைந்த அளவிலான வாக்குகளையே பெற்றுள்ளது.

தனித்துப் போட்டியிட்ட போது செல்வாக்குடன் இருந்த தேமுதிக, கூட்டணி சேர்ந்தவுடன் அதன் வாக்கு சதவிகிதம் குறையத் தொடங்கியது. விஜயகாந்தின் உடல் நலக்குறைவும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், காலம் கடந்து கூட்டணி குறித்து முடிவெடுத்ததால், தொய்வான தேர்தல் முடிவுகள் வந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் தேர்தல் முடிவு குறித்து குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், அக்கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேமுதிக தனது முரசு சின்னத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தேமுதிக பெற்ற வாக்குகள்: 2006 - 8.4% | 2009 - 10% | 2011 - 7.9% | 2014 - 5.1% | 2016- 2.41% | 2019 - 2.19% | 2021 - 0.43%.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com