மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் தெரியுமா? - வெளியான அறிவிப்பு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது - தேர்தல் அதிகாரி
தேர்தல் அதிகாரி
தேர்தல் அதிகாரிgoogle

மக்களவைத் தேர்தல் செலவிற்காக தமிழக அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாகவும், மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுக்காக 68,144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், 90 ஆயிரம் முதல் வாக்காளர்கள் டிசம்பர் மாதத்திற்கு பின் சேர்ந்துள்ள நிலையில், 18-19 வயதுடைய வாக்காளர்கள் மொத்தம் 10,45,470 இருப்பதாகவும் கூறினார்.

சி விஜில் செயலி மூலம் நேற்று ஒரே நாளில் 141 புகார்கள் பெறப்பட்டுள்ளதோடு, அதிகபட்சமாக சென்னையில் 21 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக சுவர் விளம்பரம் சம்பந்தமான புகார்களே அதிகம் பெறப்பட்டுள்ளன குறிப்பிட்டார்.

மக்களவைத் தேர்தல் செலவிற்காக தமிழக அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல், கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலின் படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்ததாகவும், ஆனால் தற்போது அதிகமானோர் பெயர் பட்டியலில் தங்களை இணைக்க வேண்டும் என கேட்டதன் அடிப்படையில் அதன் எண்ணிக்கை 6.22 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், இதில் பெயர் நீக்கத்திற்கான மனுக்களை பரிசீலித்த பிறகு மாற்றம் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.

தேர்தல் விளம்பரம் தொடர்பாக கட்சிகள் சான்றிதழ் பெற வேண்டும் என கூறிய அவர், அது தொடர்பாக இதுவரை 18 சான்றிதழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் என்ற அளவில் இருந்ததாக தெரிவித்த அவர், தற்போது இதுவரை 58 பேர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,மேலும் செலவின பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர கூடும் என்றும், பொது பார்வையாளர்கள் வேட்புமனு பரிசீலனைக்கு ஒரு நாள் முன்னதாக வருகை தருவார்கள் எனவும் கூறினார்.

ஒரு சட்டசபைத் தொகுதிக்கு ஒருவர் என்ற விதத்தில் 234 சட்டசபைத் தொகுதிக்கு வீடியோ கண்காணிப்பு குழு நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்த அவர், பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாகனத்திலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும் என்றும், அதன் மூலம் அவர்களின் பணிகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும் எனவும் கூறினார்.

இட்லி- 17 ரூபாய், புரோட்டா - 55 ரூபாய் என்று மாவட்ட அளவில் உணவு பொருட்களுக்கு செலவினத்துக்கான தேர்தல் ஆணையம் நிர்ணயத்துள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கு இது வேறுபடும் என்றும் இந்த விலை விவரத்தை ஆலோசித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

நாம் தமிழர் கட்சிக்கும் மதிமுகவிற்கும் சின்னம் ஏதும் தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறிய அவர், நட்சத்திர வேட்பாளர்கள் மார்ச் 27ம் தேதிக்குள் விண்ணப்பித்து அவர்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com