"ஓட்டுக்கு பணம் கொடுப்பது பெரும் பிரச்னையாக உள்ளது" : தேர்தல் ஆணையம்
தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பணப்பட்டுவாடா நடவடிக்கைகள் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்படும்போது, அரசு செலவிட்ட தொகையை சம்பந்தபட்ட வேட்பாளரிடமிருந்து வசூலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பணப்பட்டுவாடா புகார் காரணமாகவே, தமிழகத்தில் மூன்று தொகுதி தேர்தல் அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டு, பின்னர் நடத்தபட்டதை மனுதாரர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பது தற்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்ற கூறிய தேர்தல் ஆணையம், அரசு செலவிட்ட தொகையை வேட்பாளரிடமிருந்து வசூலிப்பது தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தது. அப்போது நீதிபதிகள், வாக்குக்கு பணம் வாங்க கூடாது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டுமென அறிவுறுத்தினர்.
ஆனால் தேர்தல் முடிந்தவுடன் வருவாய்துறை, காவல்துறை, வருமான வரித்துறை ஆகியவை தேர்தல் ஆணைய கட்டுபாட்டிலிருந்து விலகிவிடுவதால், அதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த போதிய பணியாளர்கள் இல்லை என ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மனுதாரர் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.