30 வாக்குச் சாவடிகளில் நாளை மறுநாளுக்குள் மறு வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் 30 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 27 ஆம் தேதி தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது. இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 30 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சிடுதல் உள்ளிட்ட காரணங்களால் மறுவாக்குப்பதிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம் சிட்லிங், நாகை மாவட்டம், கொள்ளிடம் 20வது வார்டு, மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சென்னகாரம்பட்டி, தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் செம்மங்குடி, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாளுக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.