தேர்தல் ஒத்திவைப்பா?: என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்
அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன், ஒவ்வொரு முறையும் பேசும்போது, தேர்தலை தடுத்து நிறுத்த சதி நடப்பதாக கூறி வருகிறார். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுகின்றன. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் வழங்க 89 கோடி செலவு செய்ய திட்டமிட்டிருந்த ஆவணங்களும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அரவக்குறிச்சி, தஞ்சைத் தொகுதிகளைப் போல ஆர்.கே.நகரிலும் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால் எப்படியாவது வெற்றி வாகை சூடிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக முயற்சி செய்கிறது. இதனிடையே, அதிமுக அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் தினகரனின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. திமுக, பாஜக, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன. நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ச்சியாக அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடா புகாருக்கு பதிலளித்துள்ள டிடிவி தினகரனோ, தேர்தலை ஒருவாரம் அல்ல ஒருமாதம் கூட தள்ளிவைக்கலாம். ஆனால் என்னுடைய வெற்றியை யாராலும் தள்ளிவைக்க முடியாது என உறுதியாக சொல்லி வருகிறார். அம்மாவின் வேட்பாளர் நான். என்னுடைய வெற்றி எப்போதோ உறுதியாகி விட்டது எனவும் கூறுகிறார். தேர்தலை ரத்து செய்ய எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன என்றும் சொல்லி வருகிறார்.
தேர்தல் ரத்தாகுமா?
ஆர்.கே.நகரில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி இறந்தார். எனவே 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினர் பதவியேற்க வேண்டும். அப்படிப் பார்த்தால், ஜூன் மாதம் 5-ஆம் தேதிக்குள் புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்போது தேர்தல் ஒருவேளை ரத்து செய்யப்பட்டாலும் கூட, புதிய தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூன் 4-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும். எனவே இந்தக் குறுகிய காலத்திற்குள் தேர்தலைத் தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் விரும்பாது என்கிறார்கள்.
இறுக்கும் தேர்தல் ஆணையம்
எப்படியாவது தேர்தலை குறிப்பிட்ட தேதியில் சிறப்பாக நடத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம். பல்வேறு அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர். தலைமைத் தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி தொடரும் நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலை கண்காணிப்பதற்கென்றே சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா நியமனம் செய்யப்பட்டார். மேலும் மாநிலத் தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று தனது பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு பணியை மும்முரமாகத் தொடங்கி விட்டார். எப்படியும் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்து விடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.