’சத்தம் பத்தாது விசில் போடு..’ தவெகவிற்கு ’விசில்’ சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. விஜய் தொடங்கிய இந்த கட்சி, தனது முதல் தேர்தலிலேயே பொதுச்சின்னத்துடன் களமிறங்குகிறது. இது கட்சியின் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
’சத்தம் பத்தாது விசில் போடு’ பாடல் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அரசியல் கட்சியை விஜய் தொடங்கி, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் விவாதம் தொடர்ந்து கொண்டிருந்த சமயம் ‘விசில் போடு’ என்று தி கோட் திரைப்படத்தில் ஓங்கி ஒலித்தார் விஜய்.. அப்போதே சமூக ஊடகங்களில் தவெகவிற்கு விசில் சின்னம் கிடைக்கப்போகிறதா என்று பரபரப்பாக பேசப்பட்டது. அந்த ஊகங்கள் உண்மையாகும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.
சின்னம் ஏன் முக்கியமானது..?
தமிழ்நாட்டு அரசியலில் சின்னம் என்பது மிக முக்கியமானது. இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து எம்ஜிஆர் பரப்புரை மேற்கொண்டாலும், அந்தத் தொகுதியில் இரட்டை இலைச் சின்னமே வெற்றி பெற்றது எனும் வரலாற்றைக் கொண்டது தமிழ்நாடு. உதயசூரியன், இரட்டை இலை போன்ற அரசியல் கட்சிகளின் சின்னங்கள் மக்களின் வாழ்வியலோடு இணைந்தது. அந்த வகையில் பெரும்பான்மையான இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை செலுத்தியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அரசியலுக்கு புதிதாக வரும் கட்சிகள் பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தால் அதில் தேர்தல் ஆணையம் ஒன்றை ஒதுக்கும். அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை என 10 விருப்ப சின்னங்களைக் கோரி தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே பொதுசின்னத்துடன் களமிறங்குவது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளையில் தற்போதைய சின்னம் ஒதுக்கீடு 2026 தேர்தலுக்கு மட்டுமே என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருக்கிறது. அதேபோல் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாத தொகுதிகளில் விசில் சின்னம் வேறு வேட்பாளருக்கு வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
தவெக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி..
ஒருபக்கம் சிபிஐ விசாரணை மறுபக்கம் ஜனநாயகன் விவகாரம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சோர்வடைந்திருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டு தற்போது வெளியாகியிருக்கும் இந்த புதிய அறிவிப்பு தவெக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சின்னத்தை மக்கள் மத்தியில் சேர்ப்பது என்பது பெரும்பாடு. சுவர் விளம்பரங்கள், சினிமாக்கள், பேனர்கள் என சின்னங்களை மக்களது மனங்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் மிகவும் சிரமப்பட்டன. ஆனால், தற்போதைய சோசியல் மீடியா உலகில் அதன் பணி என்பது எளிமையானது. அதேவேளையில், தவெகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த சின்னம், எளிமையான மற்றும் அனைவரும் அறிந்த ஒன்று என்பதால் அவர்களுக்கு அந்தப் பணி இன்னும் எளிமையானது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

