பதிவு நீக்கம் செய்யப்பட்ட 42 தமிழக அரசியல் கட்சிகள்.. திமுக - அதிமுக மீது கோபம்.. காரணம் என்ன?
தமிழகத்தில் 42 கட்சிகள் உட்பட நாடு முழுவதும் 474 அரசியல் கட்சிகளின் பதிவை அதிரடியாக ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம். இதனால் சிறிய கட்சிகள் கலக்கம் அடைந்திருக்கும் நிலையில், இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த பெருஞ்செய்தியை பார்க்கலாம்...
இந்திய தேர்தல் ஆணையத்தில், அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அக்கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அந்த வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2025 வரை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத 474 அரசியல் கட்சிகளின் பதிவுகளை நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இந்த நடவடிக்கையின் முதல்கட்டமாக, கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி 34 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியிருந்தது. அந்தவகையில், கடந்த 2 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 808 அரசியல் கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், எந்த மாநிலத்தில் எத்தனை அரசியல் கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்ற எண்ணிக்கையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகப்படியாக உத்தரப்பிரதேசத்தில் 121 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா 44 கட்சிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில், தமிழகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவுகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
பதிவுகள் நீக்கப்பட்ட கட்சிகள் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தாலும், தங்களின் சுய சின்னத்தில் போட்டியிடாததால், தேர்தலில் போட்டியிடாததாகவே கருதப்பட்டு பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தமிழ்நாட்டில் பதிவு நீக்கப்பட்டு இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கடந்த தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திருச்செங்கோடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராகக் கருதப்படவில்லை. இதனால், அவர் அரசியல் கட்சியின் பதிவும் தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகள் மீது, அதாவது திமுக, அதிமுக மீது சிறிய கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, பெரிய கட்சிகள் அதன் சின்னத்தில் தங்களைப் போட்டியிட நிர்பந்தம் செய்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசியல் கட்சிகளின் பதிவு நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படுவதை தவிர்க்க வேண்டுமென்றால், சிறிய கட்சிகள் அவர்களது சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இந்த நிலையில், இனி வரும் தேர்தல்களில் தங்கள் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என சிறிய கட்சிகள் கூறும்பட்சத்தில், அது பெரிய கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். இந்த விவகாரத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி எந்த மாதிரியான முடிவை எடுக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.