18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையம் பதில்
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24க்குள் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்ததால் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால் 18 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்தது.