கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆன 74 வயது மூதாட்டி: புகைப்படம் வெளியீடு
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி நலம்பெற்று வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், முதல் முறையாக சிகிச்சைப் பெற்றவரின் புகைப்படத்தையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை செயலாளர் ஃபீலா ராஜேஸ் நாள்தோறும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, நாள்தோறும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 738 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை இன்று செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது, அதில் "பொழிச்சலூரைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி கடந்த மாதம் 26 ஆம் தேதி மூச்சுத்திறணல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பிறகு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அரசுப் பொது மருத்துவமனைக் குழுவால் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது."
மேலும் "இதனையடுத்து அவர் இன்று பூரண குணமடைந்து வீ்ட்டிற்கு செல்கிறார். அவருக்கு உயர் ரத்த அழுத்தமும், கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையிருந்து டிஸ்சார்ஜ் ஆன அவருக்கு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி மற்றும் மருத்துவ, செவிலியர் குழுவினர் பழக்கூடை கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.