சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020: எதிர்ப்பு கிளம்புவது ஏன்..?

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020: எதிர்ப்பு கிளம்புவது ஏன்..?
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020: எதிர்ப்பு கிளம்புவது ஏன்..?

மூங்கில்காடு, மூலிகை வாசம், நிறைஞ்ச வானம்… என்று பாடல் வரிகளில் மட்டுமே இயற்கையை தரிசிக்கும் நிலைமை வந்துவிடலாம். புதிய நெடுஞ்சாலைகள், மீத்தேன், அறிவியல் ஆய்வுகள்  என்ற பெயரில் மலையும் காடுகளும் காணாமல் போகலாம். அப்படித்தான் இருக்கிறது என்கிறார்கள் மத்திய அரசு வெளியிட்டுள்ள EIA 2020: சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் நோக்கம்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு சூழலியல் மதிப்பீடு தேவையில்லை என்று இந்த வரைவு முன்வைக்கிற கருத்துதான் இயற்கையின் ஆணிவேரையே அறுப்பதாக இருக்கிறது.

ஏன் இந்த அறிக்கை?

இந்தியாவில் உள்ள மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் ஏதோ ஒரு ஊரில் அல்லது கிராமத்தில் தொழிற்சாலைகளைத் தொடங்கினால், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெறுவது நடைமுறை. சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டத்தின்படி திட்டம் பற்றிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அந்த திட்ட அறிக்கையை அரசால் அமைக்கப்படும் குழுவினர் ஆய்வுசெய்வார்கள். சுற்றுச்சூழலுக்கு  ஆபத்தை ஏற்படுத்தும் திட்டமா? என்பதை கண்டறிந்து அறிவிப்பார்கள்.

EIA 2020 ஏன் எதிர்க்கப்படுகிறது?

மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையில் நிறைய குறைகள் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பூவுலகின் நண்பர்கள் போன்ற சூழலியல் அமைப்புகளும், நடிகர் கார்த்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான வாய்ப்புகளை இந்த அறிக்கை உருவாக்குவதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பெருந்தொழில் முனைவோர் நினைத்தால் பெருங்காட்டையும் பொட்டலாக மாற்றமுடியும். மலைகளையும் தரைமட்டாக ஆக்கமுடியும் என்பதற்கான ஆரம்பப்புள்ளியை சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை வைத்துள்ளதால் தென்னிந்தியா முழுவதும் கடுமையான எதிர்க்குரல்கள் எழுந்துவருகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986

ஏற்கெனவே நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிற சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒரு பின்னணி இருக்கிறது. 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐநா சபையின் மனிதச் சூழல் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாட்டு பிரகடனத்தின் அடிப்படையில், சுற்றுப்புறச்சூழலைப்  பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் அடிப்படை  கடமை என்பது 1976ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 42வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து போபால் துயரத்திற்குப் பிறகு  சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது.

முக்கியமான மூன்று திருத்தங்கள்

சுற்றுச்சூழல், இயற்கை வளம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடியதாக இந்த வரைவு அறிக்கை இருப்பதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதில் செய்யப்பட்டுள்ள மூன்று முக்கியமான திருத்தங்களைப் பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை முன்வைக்காமலும், மக்களிடம் கருத்துக் கேட்காமலும் நடைமுறையில் செயல்பாட்டில் உள்ள புதிய திட்டங்கள், பழைய திட்டங்களின் விரிவாக்கங்கள், கட்டுமானப் பணிகளை எவ்வித தடையுமின்றி தொடரலாம்.

சாலைகளை அகலப்படுத்துதல், விரிவாக்கத் திட்டங்கள், நீராதாரக் கட்டமைப்புகள், பெரும் கட்டுமானத் திட்டங்கள் போன்ற பதினான்கு  வகையான பணிகளுக்கும், குறிப்பாக சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிப்பவை என்று கருதப்படும் திட்டங்களுக்கும் இனி சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை தேவையில்லை.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மற்றும் கடலோரத் தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் செயல்படுத்தப்படும் கட்டுமானத்திட்டங்கள், விரிவாக்கப் பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை.  

தமிழகத்தில் பறிபோகும் இயற்கைவளம்?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இயற்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை வரிசைப்படுத்தியுள்ளார். சேலம் பசுமை வழிச்சாலை, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அணை எனப் பட்டியலிடும் அவர், “காவிரி டெல்டா பகுதியை சகாரா பாலைவனமாக்க அதிமுக அரசின் ஒத்திசைவுடன் மத்திய அரசு ஒவ்வொரு திட்டமாக அனுமதித்துவருகிறது” என்கிறார்.

சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதிபெறவேண்டிய எண்ணற்ற திட்டங்களை மறுவகைப்படுத்தி, அவற்றை எல்லாம் சுற்றுப்புறச்சூழல் அனுமதிபெறத் தேவையில்லாத பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம், அது  மக்கள் விரோத சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கையாகவே இருக்கிறது என்று குற்றம்சாட்டும் ஸ்டாலின், பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கான காலஅவகாசமும் குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டிக்கிறார்.

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான அறிக்கை

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை பற்றி விமர்சித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,  "மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தலைவரையும், உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிப்பது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தைச் சவப்பெட்டியில் தள்ளி, அடிக்கும் கடைசி ஆணி" என்று கோபத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.    

மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தாகாரத், “சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிக்கை ஜனநாயக விரோதமானது, அநியாயமானது” என்று குறிப்பிடுகிறார்.  

சூழலியல் வரைவு அறிக்கை பற்றிய கவலையை வெளிப்படுத்தும் நடிகர் கார்த்தி, “இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது” என்கிறார்.   

நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்? என்ற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார்.     

கருத்துச் சொல்ல கடைசி தேதி

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை பற்றிய மக்கள் கருத்துகளைச் சொல்வதற்கு கடைசி தேதி ஆகஸ்ட் 11. கொரோனா காலத்தில் அந்த தேதி யாருக்கு நினைவிருக்கும்? இந்த நெருக்கடியான காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தின் ஆதாரமான இயற்கையைப் பற்றி கருத்துக் கேட்கலாமா என்பதுதான் நியாயமான ஆதங்கமாக இருக்கிறது. கருத்துச் சொல்வதுதான் மக்களிடம் கைவசம் உள்ள கடைசி வாய்ப்பு.

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைப் பற்றிய இறுதிமுடிவை எட்டுவதற்கு முன்பு மக்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது ஏதோ ஒருபக்கம் சிறு நம்பிக்கை துளிர்விடுகிறது.   

கருத்துக்களை அனுப்பவேண்டிய இமெயில் முகவரி: eia2020-moefcc@gov.in

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com