"கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்தது எப்படி?" - தாயாரின் குற்றச்சாட்டிற்கு அரசு மருத்துவமனை விளக்கம்

கையை இழந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை File Image

ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்தவா் தஸ்தகீா் - அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ செலுத்தப்பட்டுள்ளது. ட்ரிப்ஸ் செலுத்தப்பட்ட வலது கை கருப்பாக மாறி அழுகியது.

பரிசோதனை செய்த மருத்துவா்கள் வலது கையை அகற்ற வேண்டுமென கூறி, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனா். கடந்த மாதம் குழந்தையின் வலது கை மூட்டு பகுதிக்கு மேல் வரை அகற்றப்பட்டது.

குழந்தை உயிரிழப்பு
குழந்தை உயிரிழப்புகோப்பு புகைப்படம்

இதற்கிடையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக தனது ஒன்றரை வயது குழந்தை கையை இழந்ததாகவும் பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். இதைத்தொடர்ந்து குழந்தைக்கு அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

பெற்றோர்களின் குற்றச்சாட்டு எதிரொலியாக அரசு சார்பில் விசாரணை குழு நடத்திய விசாரணையில், குழந்தைக்கு தவறான சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதன் தாயார் அஜிஸா, மருத்துவர்களின் தவறு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும், குழந்தையின் சிகிச்சை பற்றி கேட்டபோது மருத்துவர்கள் கேலி செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் குழந்தையின் உடல்நிலை குறித்து தான் கேட்கும் கேள்விக்கு எந்தவித பதிலையும் மருத்துவர்கள் சொல்லவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் கையை இழந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. அதில், ''குழந்தைக்கான சில மருத்துவ சிகிச்சைகளுக்கு பெற்றோர் ஒப்புதல் அளிக்கவில்லை. பாக்டீரியா தொற்றினால் ரத்தத்தில் நச்சுகள் கலந்து குழந்தைக்கு பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தது. உயர்தர சிகிச்சைகள் அளித்தும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை'' என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com