“பொதுமக்கள் விருப்பம்போல் முட்டைகளைச் சாப்பிடலாம்” - தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கம்!
பிரபல தனியார் நிறுவனம் உற்பத்தி செய்யும் முட்டைகளில் நைட்ரோபியூரன்ஸ் என்னும் புற்றுநோயை உருவாக்கும் வேதிமூலக்கூறுகள் இருப்பதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் முட்டைகளின் தரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், பரிசோதனைக்காக முட்டைகளைச் சேகரிப்பது குறித்து நாமக்கல்லில் கோழிப் பண்ணையாளர் சங்கத் தலைவர் சிங்கராஜ், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிங்கராஜ், ”முட்டை குறித்து சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். புற்றுநோய் உருவாக்கக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகளை நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணையாளர்கள் பயன்படுத்துவதில்லை. எனவே பொதுமக்கள் அச்சமின்றி முட்டைகளை சாப்பிடலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களின் ஐயத்தை சந்தேகத்தைப் போக்கும் வகையில், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மூலம், நடப்பு வாரத்தில் கோழிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு, முட்டை மாதிரிகளை எடுத்து, பரிசோதனைகள் மேற்கொண்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
சமீபத்தில் கர்நாடகாவைச் சார்ந்த யூடியூபர் ஒருவர் தனியார் நிறுவனத்தின் முட்டைகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் நைட்ரோஃபியுரான் கெமிக்கல் கலந்திருப்பதாக கூறி தரவுகளுடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த அதிர்ச்சி தகவலைத் தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

