10 ஆண்டுகளில் இல்லாத அளவு முட்டை கொள்முதல் விலை சரிவு..!
கொரோனா பீதியால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில், முட்டை கொள்முதல் விலை ரூ.1.95 ஆக சரிந்துள்ளது.
உலகமெங்கும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அதனடிப்படையில் தற்போது இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் எதன் மூலம் பரவுகிறது என்பது குறித்து தெளிவான தகவல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால் கொரோனா பல்வேறு வகையில் பரவுவதாக வதந்திகள் வெளியாகின. அதில் ஒரு பகுதியாக பிராய்லர் கோழிகளிலும் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் மருத்துவர்களும் வல்லுநர்களும் அவ்வாறு இல்லை என கூறி வருகின்றனர்.
இத்தகைய வதந்தியால் பிராய்லர் கோழியின் விலை குறைந்து கொண்டே செல்கிறது. அதன் பாதிப்பு தற்போது முட்டைகளிலும் பிரதிபலித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக 15 கோடி முட்டைகள் தேங்கியதாக தெரிகிறது. இதனால் முட்டையின் கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து தற்போது ரூ.1.95 விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.1.95 ஆக குறைந்துள்ளது. ஆனால் சென்னையில் உள்ள கடைகளில் முட்டை விலை ரூ.3.50 ரூபாய்க்கு மேல்தான் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை கொள்முதல் விலை குறைந்தாலும் ஓட்டல்களில் ஆம்லெட் விலை குறைக்கப்படுவதில்லை என பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.