எல்லாவற்றிற்கும் அடிப்படை பணமே: நீதிபதிகள் வேதனை

எல்லாவற்றிற்கும் அடிப்படை பணமே: நீதிபதிகள் வேதனை
எல்லாவற்றிற்கும் அடிப்படை பணமே: நீதிபதிகள் வேதனை

எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக இருப்பது பணமே என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மருத்துவ கல்வி இயக்குநராக எட்வின்ஜோ மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக பணிபுரிந்த டாக்டர் விமலா ஓய்வு பெற்றதையடுத்து கோவை அரசு மருத்துவமனை டீனாக பணிபுரிந்த டாக்டர் எட்வின்ஜோ  மருத்துவக் கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்படவுள்ளார். இவரது நியமனத்தை எதிர்த்து கரூர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்தும், உடனடியாக ரேவதி கயிலைராஜனை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி உத்தரவிட்டது. தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே மருத்துவக் கல்வி இயக்குனராக பதவி வகிக்க தனக்கு தகுதியிருப்பதாக கூறி, திருவாரூர் அரசு மருத்துவமனை டீன் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் தாக்கல் செய்த மனுவும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு டிசம்பர் 12-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, எட்வின்ஜோ, ரேவதி கயிலைராஜன் ஆகிய இருவரையும் மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த உத்தரவுகளை நீதிபதிகள் வேணுகோபால், அப்துல்குத்தூஸ் அமர்வு ரத்துசெய்தது. மேலும், பணி மூப்பு, போதிய கல்வித்தகுதி உள்ள ரேவதியை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிப்பது குறித்து, சுகாதாரத்துறை செயலாளர் 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியிருந்தனர்.

இதனிடையே, நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மருத்துவர் ரேவதி தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த வாரம் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, 36 ஆண்டுகள் பணி அனுபவம் மிக்க ரேவதிக்கு ஏன் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் பணி வழங்கப்படவில்லை? என கேள்வி எழுப்பியது. அவரை விட அனுபவம் குறைந்தவர்களுக்கு பணி வழங்கப்பட காரணம் என்ன? அவரை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்க ஏன் பரிசீலிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், தாரண் அமர்வு முன்பு இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், மருத்துவக் கல்வி இயக்குனராக எட்வின்ஜோ மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கு எந்த அடிப்படையில் எட்வின்ஜோ நியமனம் செய்யப்பட்டார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஒப்பீட்டு அறிக்கை ஒன்றினை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். பின்னர், எட்வின்ஜோவுக்கு சாதகமாக 9 அம்சங்கள் இருக்கையில், ரேவதிக்கு சாதகமாக ஒரு அம்சம் கூட இல்லையா என்று கேள்வி எழுப்பினார். 

இதனிடையே, மருத்துவர் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் தொடர்பாக ஆஜராக வழக்கறிஞர், 2010ம் ஆண்டிலே மருத்துவக் கல்வி இயக்குநருக்கான தேர்வு பட்டியலில் மீனாட்சிசுந்தரம் இடம்பெற்றிருப்பதாகவும், அதற்கு பின் ஒரு குற்றச்சாட்டில் அவருக்கு மெமோ அளிக்கப்பட்டதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  மருத்துவக் கல்வி இயக்குநருக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றவருக்கு மெமோ அனுப்பப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நீண்ட ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்காவிட்டாலும், அவர்களை களங்கப்படுத்தாதீர்கள் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக இருப்பது பணமே, சில அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர். இந்த வழக்கில் தனி நீதிபதி மற்றும் அமர்வு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளின் சாரம்சங்களை தொகுத்து தாக்கல் செய்யுமாறு ரேவதி கயிலைராஜன் தரப்பினருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com