“சிலைக்கு தரும் முக்கியத்தை கல்விக்கு கொடுப்பதில்லை”-அசெர் ஆய்வு முடிவும் நெடுஞ்செழியன் கருத்தும்!

“சிலை & கோயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கல்விக்கு கொடுப்பதில்லை” என அசெர் ஆய்வு முடிவு குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
கல்வியாளர் நெடுஞ்செழியன்
கல்வியாளர் நெடுஞ்செழியன்pt web

நாட்டில் 14 முதல் 18 வயது வரையிலான மாணவர்களில், 25 சதவீதம் பேருக்கு, இரண்டாம் வகுப்பு பாடத்தை கூட, தங்கள் தாய் மொழியில் சரளமாக படிக்க முடியவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அசெர் என்ற அமைப்பு, 4 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் தரவுகள் அடிப்படையில், கல்வி நிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் அசெர் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் 616 மாவட்டங்களில் உள்ள 19 ஆயிரத்து 60 கிராமங்களில், 6 லட்சத்து 99 ஆயிரத்து 597 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 27 ஆயிரத்து 536 தன்னார்வலர்கள் மூலமாக இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், நாட்டில் உள்ள 14 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை அவர்களின் தாய்மொழியில் சரளமாக படிக்க இயலமுடியாத நிலை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களால் 3-ஆம் வகுப்பு கணித பாடத்தை தீர்க்க முடியவில்லை என்றும், அதோடு 42.7 சதவீதம் பேரால் ஆங்கிலத்தில் வாக்கியங்களை படிக்க முடியவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியே ஆங்கில வாக்கியங்களை படிப்பவர்களில் 4-இல் ஒருவருக்கு அர்த்தம் புரியவில்லை என்பதும் தெரிகிறது.

கிராமப்புற பகுதியைச் சேர்ந்த 14 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்களால் 3 மற்றும் 4-ஆம் வகுப்புகளில் கற்பிக்கப்படும் எளிமையான மூன்று இலக்க கணித சிக்கலை கூட தீர்க்க முடியவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

இதற்கிடையே, இந்த ஆய்வு முடிவை முழுமையான ஆய்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய அவர், “6.99 லட்சம் பேரிடம் அவர்கள் ஆய்வு நடத்தியுள்ளார்கள். இது மிகமிக குறைவான எண்ணிக்கை. இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே 35 கோடிபேர் உள்ளனர். இந்த டேட்டா அதிகமாக இருந்தால் இந்த ரிப்போர்ட்டை நாம் கருத்தில் கொள்ளலாம். இந்த எண்ணிக்கையை வைத்து நாம் எந்த ஒரு கருத்தையும் கூற முடியாது.

ஆனால் கல்வியின் தரம் என்பது இந்தியா முழுவதும் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டுள்ளது. எனக்கு தெரிந்த வரை கல்விக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. சிலைக்கோ கோயிலுக்கோ கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் நிச்சயமாக கல்விக்கு கொடுப்பதில்லை” எனத் தெரிவித்தார்.

அசெர் கல்வி நிலை ஆய்வு என்பது தனியார் அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வாக இருந்தாலும், இதன் முடிவுகளை கவனத்தில் கொண்டு மாணவர்களின் கல்வியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கல்வி ஆர்வலர்கள் வேண்டுகோளாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com