“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி
வசந்தகுமாரின் பேராசையால்தான் நாங்குநேரியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நாங்குநேரி எம்.எல்.ஏவாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானார். இதையடுத்து நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரும் அதிமுக சார்பில் நாராயணனும் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி “ மக்களுக்கு நன்மை செய்வதற்காக இல்லாமல், பதவிக்காக வசந்தகுமார் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாகியுள்ளார். அதிமுக வேட்பாளர் நாராயணனை எளிதாக அணுக முடியும். காங்கிரஸ் வேட்பாளர் கோடீஸ்வரர் என்பதால் அணுக முடியாது. நன்மை தரும் வேட்பாளர் வேண்டுமா? வெளியூர் வேட்பாளர் வேண்டுமா? யாரை தேர்ந்தெடுத்தால் நன்மை கிடைக்கும் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இடைத்தேர்தல் வரும்போதுதான் எதிர்கட்சி தலைவருக்கு திண்ணை ஞாபகம் வருகிறது” எனத் பேசினார்.

