மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு
மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டுமென, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 20ஆம் தேதி கர்நாடக மாநில மைசூர் - காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி தலைமைப் பொறியாளர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேகதாது அணைக்கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேகதாதுவால் 400 மெகாவாட் அளவுக்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீருக்காகவும், மின்சார தேவைக்காகவும் மேகதாது அணை கட்டுவது அவசியம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பலமுறை அனுமதி கேட்டு கர்நாடக அரசு கடிதம் எழுதிய நிலையில், தற்போது மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த கர்நாடக முதலமைச்சர், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தியிருந்தார்.
இதைத்தொடந்து மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானது என கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கையை நிராகரிக்கும்படி மத்திய நீர்வள ஆணையத்திற்கு ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு திரைமறைவில் ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி மேகதாது அணை கட்டுவதற்கு தடை உத்தரவு பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.