“திமுக அரசில் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித்தாக்குதல்” - எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியின் அதிமுக செயலாளரான போகர் ரவி அரசு ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டு வருகிறார்.
நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் இவர் பேரூராட்சி நிர்வாக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று போகர் ரவி வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒப்பந்த பணிக்கான தொகையை நிறுத்தி வைத்தது குறித்து கேட்கச்சென்ற நிலையில், அங்கு வந்த திமுக மாவட்ட பொருளாளரும், பேரூராட்சி மன்ற தலைவரின் கணவருமான அலெக்சாண்டர் மற்றும் அவரது சகோதரரான பேரூராட்சி துணைத் தலைவர் அன்புச் செழியன் உள்ளிட்ட ஏழு பேர் போகர் ரவியைத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த அதிமுக மாவட்டசெயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அதிமுக பேரூராட்சி செயலாளர் தாக்கியதால் காயமடைந்ததாக அலெக்ஸாண்டரும், அன்புச்செழியனும் மயிலாடுதுறை அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தாக்குதல் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன” என தெரிவித்துள்ளார்.
மேலும், “ஸ்டாலினின் திமுக அரசில் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித்தாக்குதல் நடைபெறுவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்” என தெரிவித்துள்ளார்.