“செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும்; முதல்வர் இரட்டைவேடம் போடுகிறார்” - எடப்பாடி பழனிசாமி

“செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போட்டு வருகிறார்” என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
Edapadi Palanisamy
Edapadi PalanisamyPT Desk

அதிமுக முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமண விழா, திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது, “அமைச்சர் செந்தில் பாலாஜி மீது இப்போது போடப்பட்ட வழக்கல்ல இந்த வழக்கு. ஏற்கெனவே போடப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ‘பொருளாதார குற்றப்பிரிவு விசாரிக்க தடை இல்லை’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

eps
epspt desk

டாஸ்மாக்கில் 6,000 கடைகள் உள்ளன. இதில், 4,000 கடைகளுக்கு டெண்டர் விடவில்லை. முறைகேடாக இரண்டு ஆண்டு காலமாக பார்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் திமுகவைச் சேர்ந்த மேல் மட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. முறைகேடாக நடைபெற்ற பாரில் போலி மதுபானம் தயாரிக்கப்பட்டதாகவும், கலால் வரி செலுத்தாமல் ஒரு குவாட்டர் 100 ரூபாய்க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

செந்தில் பாலாஜி உத்தமர் என்பது போல் ஸ்டாலின் புலம்பி வருகிறார். வேண்டுமென்று பொருளாதார குற்றப்பிரிவும், வருமானவரித் துறையும் ரெய்டு நடத்துவதாகக் கூறி வருகிறார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசுவது ஒன்று, இப்போது பேசுவது வேறு. முதல்வர் இரட்டை வேடம் போட்டு வருகிறார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்PT Tesk

30 ஆயிரம் கோடி குறித்து ஏதாவது செந்தில் பாலாஜி பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் அனைவரும் சென்று பார்க்கின்றனர். ஆக செந்தில் பாலாஜி மீது அக்கறை இல்லை இவர்களுக்கு, வெறும் பயம்தான். செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பேசியவற்றை, வீடியோ வடிவில் இங்கே காண்க:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com