உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல்... சவால்களை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி தீவிரம்!

உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல்... சவால்களை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி தீவிரம்!

உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல்... சவால்களை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி தீவிரம்!
Published on

உள்ளாட்சி தேர்தலையொட்டியும், அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்திலும் தன் முன்னுள்ள சவால்களை எதிர்கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

10 வருடங்கள் ஆட்சி கட்டிலில் அதிமுக இருந்தாலும் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகான நாட்கள் முள்கிரீடமாக இருந்தது என்றால் மிகையல்ல. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பின்னும் பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஓபிஎஸ் - இபிஎஸ் களமிறங்கியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இருக்கும்போது வழக்கமாக கட்சி அலுவலகத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்க இபிஎஸ் - ஓபிஎஸ் இருவருமே முடிவெடுத்துள்ளனர். அதிமுகவினரிடம் சசிகலா அவ்வப்போது தொலைபேசியில் உரையாடி வரும் சூழலில், அதிமுக தொண்டர்களின் பிரச்னைகளுக்கும் புகார்களுக்கும் தீர்வு காண இந்தச் சந்திப்புகள் அவசியம் என ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

'தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் அதில் அதிக கவனம் செலுத்துங்கள்' என அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிக்கான தேர்தலும் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட அதிமுகவால் பிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து, உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து முழுமையாக கவனம் செலுத்தி களப்பணி ஆற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 5 வருடத்திற்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணைய விதி உள்ள நிலையில், 6 மாத கால அவகாசத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடந்த அதேவேளையில், அதிமுக அலுவலகத்தை சுற்றி சசிகலாவிற்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

- ஸ்டாலின்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com