கிருஷ்ணசாமி மனைவிக்கு முதல்வர் தொலைபேசியில் ஆறுதல்
நீட் தேர்வு எழுதிய மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் இறந்த நிலையில் அவரது மனைவியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.
நீட் தேர்வு எழுதிய மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் இறந்த நிலையில் கிருஷ்ணசாமியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் தர உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மறைந்த கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேரள தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இதன்படி எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் எடுத்து வருவதற்காக தமிழக அரசின் சார்பில் ஒரு குழு கேரளம் சென்றுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதல்வர் விடுத்துள்ள அடுத்த அறிக்கையில், மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தாயார் பாரதி மகாதேவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தமும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. அப்போது தனது மகனின் மேற்படிப்பு செலவுக்கு உதவிடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்விச் செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என்று தெரிவித்ததாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.