“நீட் தேர்வில் மோசடி நடைபெறாதவாறு நடவடிக்கை” - முதல்வர் பழனிசாமி
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே அதிமுக அரசின் மீது விமர்சனங்களை முன்வைப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாவட்டம் மேட்டூரில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், பல்வேறு துறைகள் சார்பில் மேட்டூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகளில் முதல்முறையாக அதிமுக ஆட்சியில்தான் குடிமராமத்துப் பணியின் கீழ் தூர்வாரப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
மேலும் அதிமுக அரசு பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது எனவும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே அதிமுக அரசின் மீது விமர்சனங்களை முன்வைப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். 2011 முதல் 2019 வரை பல திட்டங்கள் நிறைவேறியுள்ளன எனவும் நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதைத்தொடந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், “நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் எதிர்காலத்தில் மோசடிகள் நடைபெறாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழன் தொன்மை குறித்து ஐ.நா. அவையில் பிரதமர் மோடி பேசியதை பெருமையாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.