“நேரடியாக எதிர்க்க முடியாமல் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவுகிறது திமுக அரசு" - எடப்பாடி பழனிசாமி

“நேரடியாக எதிர்க்க முடியாமல் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவுகிறது திமுக அரசு" - எடப்பாடி பழனிசாமி
“நேரடியாக எதிர்க்க முடியாமல் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவுகிறது திமுக அரசு" - எடப்பாடி பழனிசாமி

ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, அரசியல் ரீதியான பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருவது குறித்த கேள்வி அவரிடம் கேட்கப்படுகையில், “நேரடியாக எதிர்க்க திராணியல்லாத திமுக அரசு, லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவிவிட்டுள்ளது. திட்டமிட்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, உறவினர் வீடுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சோதனை நடத்துகிறது திமுக அரசு. எங்கள் கழகத்தின் அமைப்பு தேர்தலானது, எழுச்சியோடு நடைபெற்று வரும் நிலையில், திமுக அரசு இந்த ரெய்டை நடத்துகின்றது. அவர்களால் அதிமுக-வின் வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடியவில்லை. திமுகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது.

திமுக, தேர்தல் அறிக்கையில் 525 வாக்குறுதிகளை வழங்கியது. அதனை செயல்படுத்த முடியாததால், மக்கள் கவனத்தை திசை திருப்ப எங்கள் மீது வழக்கு தொடுக்கின்றது. குடும்ப பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய், எரிவாயு மானிம், கல்விக் கடன் ரத்து, முதியோர் உதவித் தொகை உயர்த்துவது, டீசல் விலை குறைப்பு, 5 சவரன் தள்ளுபடி போன்ற எந்த வாக்குறுதியையும் இன்னமும் திமுக நிறைவேற்றவில்லை. இவர்களை நம்பி மக்கள் ஏமார்ந்து போய்விட்டனர்.

திமுக அறிவித்த திட்டங்கள் எல்லாமே அப்படியே உள்ளது. சர்க்கரை என சொல்வதால் மட்டும் இனிக்காது, வாயில் போட்டால்தான் இனிக்கும். நாங்கள் எங்கள் ஆட்சியில் சர்க்கரையை உற்பத்தி செய்து வைத்தோம். அதையே திமுக இப்போதுவரை பயன்படுத்துகிறது. அதனால்தான் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைதான் தற்போது திமுக-வினர் அடிக்கல் நட்டுவைத்து, திறந்து வைக்கின்றனர். அதிமுக, பழங்குடி மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் தந்துள்ளோம். அப்படி அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் சிலவற்றை முடக்கவும் திமுக அரசு வேலை பார்க்கின்றனர்.

வாக்குறுதி நிறைவேற்றாதது மட்டும் திமுக தோல்வியல்ல. டீசல் விலை உயர்வால், தமிழகத்தில் அத்தியாவசிய விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் டீசல் விலை குறைந்த பின்னும் தமிழகத்தில் திமுக அரசு குறைக்கவில்லை. தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஒருமுறை குவாரி பர்மிட் வாங்கவேண்டும் என்ற முறையொன்று வந்துள்ளது. இது ஜல்லி உற்பத்தியாளர்களை பாதிக்கும். ஆனால் திமுக அரசு அதை உணரவில்லை.

கடந்த வாரங்களில் பெய்த கனமழையில், சென்னையே மிதந்தது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே தூர்வாரி இருந்தால் அப்படி மிதந்திருக்காது. மட்டுமன்றி ஸ்மார்ட் சிட்டியில் அக்டோபர் மாதம் மேம்பாலம் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் போடும் பணி தொடங்கியதால் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. இப்படியாக அனைத்து வகையிலும் திமுக தோல்வி அடைந்துவிட்டது.

இதையெல்லாம் மறைக்கவும், வரும் 17-ம் தேதி நடைபெறும் அதிமுக ஆர்பாட்டத்தை முடக்குவதற்குவும்தான் இந்த ரெய்டு நடக்கிறது. திமுகவால் அரசியல் ரீதியாக எதிர்க்க முடியவில்லை. அதனாலேயே இப்படி ரெய்டு செய்கிறது. ஆனால் அதிமுக அப்படியல்ல. அதிமுக, எந்த வழக்கானாலும் சட்டரீதியாக எதிர்கொள்ளும். அதிமுக வீழ்ந்துவிடும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் எழுச்சியாக உள்ளது எங்கள் கட்சி.

கடந்தமுறை திமுக ஆட்சியில் இருந்தபோது 13 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசுதான் திமுக அரசு. திமுக-வின் தாரக மந்திரமே ‘கமிஷன், கலெக்‌ஷன், கரப்ட்சனன்’ என்பது தான். இந்த 6 மாதத்தில், 6 ஆயிரம் கோடி ரூபாய் திமுக அரசு சம்பாதித்துள்ளது.

தொடர்ந்து பாமக-வின் அதிமுக மீதான விமர்சனம் குறித்தும், அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியானது குறித்தும் கேட்கப்பட்டது. அப்போது பேசுகையில், “பாமகவுக்கு என்ன துரோகம் செய்தோம் என்று அவர்கள் தான் கூறவேண்டும். நாங்கள் தர்மத்தை மீறி செயல்படுவதாக அவர்கள் கூறிய குற்றச்சாட்டு குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். பாமக அதிமுக கூட்டணியில் இல்லை என அவர்களே வெளியேறி விட்டதாக தெரிவித்து விட்டனர். அதனால் அவர்கள் கூட்டணியில் இல்லை. தேர்தல் நேரத்தில் அடிக்கடி கூட்டணியை மாற்றுவது, அவர்களின் வாடிக்கைதான்” என்று பதிலளித்தார்.

- பாலகிருஷ்ணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com