“அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க முடியவில்லை” - அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தகவல்!
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தன்னுடைய கணவரை சட்டவிரோதமாக அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்தார். அம்மனுவில், தனியார் மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்றகோரி அவர் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்ப்பட்டது.
அதேசமயம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், அமலாக்கத்துறை காவலில் வைத்து 8 நாட்கள் விசாரிக்க அனுமதி கொடுத்தும் ஜூன் 16ம் தேதி உத்தரவிட்டது. மீண்டும் ஜூன் 23ஆம் தேதி அவரை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால், செந்தில் பாலாஜியிடம் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதாக எந்த தகவலும் வரவில்லை.
இந்நிலையில், சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் இன்று ஆஜராகி, “அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தற்போதைய நிலையில் விசாரணை நடத்தினால் அவருக்கு தொந்தரவாக அமையும் என்றும், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் காவிரி மருத்துவக் குழுவினர் பரிந்துரைக்கின்றனர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை” என தெரிவித்தார்.