சிறையில் செந்தில் பாலாஜி.. வீட்டில் ED ரெய்டு.. கரூரில் மீண்டும் பரபரப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கரூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்pt web

கடந்த மே மாதத்தில் இருந்து வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் 10க்கும் மேற்பட்ட முறை கரூர் மாவட்டத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் செந்தில்பாலாஜியின் சகோதரரது இல்லம், அவர்களது நண்பர்கள் என பலரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக செந்தில்பாலாஜியின் பூர்வீக விடு கரூரில் இருந்து 10 கிமீ தொலைவில் ராமேஸ்வரப்பட்டியில் உள்ளது. அங்கு செந்தில்பாலாஜியின் தாய் தந்தையினர் வசித்து வருகின்றனர். அங்கும் ஒருநாள் முழுவதும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தற்போது இரண்டாவது முறையாக செந்தில்பாலாஜியின் தாய் தந்தையர் இருக்கும் இடத்தில் சோதனையில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். கேரளப்பதிவெண் கொண்ட காரில் வந்த ஐந்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்தது உயர்நீதிமன்றம். இதனால் அவர் தற்போதுவரை சிறையில் இருக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிfile image

சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவான 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கிலும் பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com