“ED Raid ரொம்ப ஜாலியா போகுது” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
மயிலாடுதுறையில் திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அம்மாவட்ட கழக செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில், திமுக மூத்த முன்னோடி உறுப்பினர்கள் ஆயிரம் பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் பொற்கிழியும், மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறையில் கட்சியின் மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு பொற்கிழி வழங்கியிருக்கிறோம். மாலையில் மாவட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு நாளை நாகப்பட்டினம் செல்கிறேன்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் பாஜக திமுகவை எதிர்ப்பதற்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “திமுகவும் தான் பாஜகவை எதிர்க்கிறது. பாஜக நம்மை எதிப்பதால் நாம் நல்ல பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த தமிழகமும் பாஜகவை எதிர்க்கத்தான் செய்கிறது. எந்த காலத்திலும் பாஜகவை திமுக மட்டுமல்ல, தமிழக மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்றார்.

பின் அவரிடம் பத்திரிகையாளர்கள் ED Raid பற்றி எழுப்பிய கேள்விக்கு, “ரொம்ப ஜாலியாக தான் போய்க் கொண்டிருக்கிறது” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.