
கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் மேற்கொண்டது உள்ளிட்ட அனைத்தையும் அங்கீகரிக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில் முக்கியமாக “கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட இருக்கிறது. கட்சி விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் தான் தேர்தலில் வேட்பாளர்களை எந்த குழப்பமும் இல்லாமல் நிறுத்த முடியும். எனவே உடனடியாக விதிமுறை மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக 10 நாட்களுக்குள் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்கீழ் இன்று தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்தது. அதன்படி தேர்தல் ஆணையம், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரித்துள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக சட்டமன்றத் தேர்தலை நடத்தும் தலைமை அதிகாரிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியான அதிமுகவினுடைய இரட்டை இலை சின்னத்தை தற்பொழுதுள்ள கட்சிக்கு ஒதுக்குமாறு வலியுறுத்தி, அதன் நகலை அதிமுக பொதுச்செயலாளருக்கு அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதை வைத்து இதை பார்க்கையில், அவருக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.