9 லட்சம் இளம் வாக்காளர்கள்: தமிழகத்தின் வாக்காளர் இறுதிப்பட்டியல் - முழு விவரம்!
தமிழகத்தில் சுமார் 9 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்பட 6 கோடியே 26 லட்சம் பேர் வாக்காளர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வழக்கம்போலவே, ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். 3 கோடியே 8 லட்சம் ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 18 லட்சம் பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஏழாயிரத்து 246 பேரும் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளனர். 18 வயது முதல் 19 வயது வரையிலான இளம் வாக்காளர்கள் 8 லட்சத்து 97 ஆயிரம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 80 ஆயிரத்து 953ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 16 ஆயிரத்து 423பெண் வாக்காளர்களும், 318 மூன்றாம் பாலினத்தவர்களும் புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர். கவுண்டம்பாளையம், மாதவரம், மதுரவாயல், ஆவடி, பல்லாவரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய தொகுதிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்திலேயே குறைவாக சென்னை துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கீழ்வேளூர், கூடலூர், ராயபுரம், குன்னூர், எழும்பூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்காளர்களே உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து 57 ஆயிரத்து 360 வாக்காளர்கள் உள்ளனர். குறைவாக பெரம்பலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 986 பேர் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக 21 லட்சத்து 82 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், 21 லட்சத்து 39 ஆயிரம் பேர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு காரணமாக 5 லட்சத்து 9 ஆயிரம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.