சேலம் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அச்சம் அடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி தஞ்சம் அடைந்தனர்.
கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றின் மூலம் 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டுள்ளது. இதனால் 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 117 அடியை தாண்டி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டுள்ளதால் நீர்மட்டம் 120 அடியை எட்டியதும், மொத்த நீரும் உபரிநீராக திறந்துவிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் இன்று காலை திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே ஓடிவந்து, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும்போது இவ்வாறு நில அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த நிலஅதிர்வு காரணமாக சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

