“பண மதிப்பிழப்பு நோட்டுகளில் ரூ.48.31 லட்சமே இருந்தன”- சசிகலா விளக்கம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தன்னிடம் 48.31 லட்சம் மட்டுமே பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகள் இருந்ததாக வருமான வரித்துறையிடம் சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.
தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில் தன்னிடம் 48.31 லட்சம் மட்டுமே பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகள் இருந்ததாகவும் அந்தப் பணத்தையும் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு முன்னரே வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டதாகவும் சசிகலா வருமான வரித்துறையிடம் கூறியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக வருமான வரித்துறை இயக்குனர், பினாமி தடை வருமான வரிப்பிரிவு உதவி இயக்குநருக்கு எழுதிய கடிததத்தில், ரூபாய் 1911 கோடியானது 3 வது நபருக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டதை சசிகலா மேற்கோள் காட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே தன்னிடம் 48.31 லட்சம் பணம் மட்டுமே இருந்ததாகவும் சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சசிகலா எந்தவொரு பினாமி பரிவர்த்தனைகளிலும் ஈடுபடவில்லை என்றும் அவரது ஆடிட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் வரை சசிகலா மருத்துவமனை தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருந்தார். அதன்பின் கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்படியான நேரத்தில் அவர் எந்தவொரு பினாமி பரிவர்த்தனைகளிலும் ஈடுபடவில்லை என்றும் சசிகலா ஆடிட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரித்துறை உதவி ஆணையரோ, ரொக்கம் யாருக்குச் சொந்தம் என்பது கவலையில்லை, குறிப்பிட்ட பினாமி பரிவர்த்தனையில் அவர் ஈடுபட்டதாக அதிக ஆதாரங்கள் இருப்பதாக ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.