“இளைய சமுதாயமே, வீறு கொண்டு எழு.. புரட்சிக்கு தயாராகு” - துரைமுருகன் ஆக்ரோஷமான பேச்சு
தான் மறைந்தாலும் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு பொதுக்குழுவில் பேசினார். அப்போது “எங்கோ இருந்து வந்த என்னை எந்த ஊர் என்று கூட கேட்காமல், தொண்டனாக, தோழனாக, எல்லா பதவியும் கொடுத்து அழகு பார்த்தவர் கருணாநிதி. எனவே, என்றைக்கும் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.
நான் எந்த காலத்திலும் கருணாநிதிக்கு துரோகம் செய்ததில்லை. நான் மறைந்தாலும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள். இதுவரை 3 % உள்ள பிராமணர்களை மட்டுமே எதிர்த்து வந்தோம். இப்போது நாம் எதிர்ப்பவர்கள் ஜனநாயகம் மீது நம்பிக்கையற்றவர்கள். இந்தியை திணிப்போம் என ஆக்கிரோஷமாக வந்திருப்பவர்களை நாம் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம்.
நம்மை எதிர்ப்பவர்கள் சட்டத்தை பற்றி தெரியாதவர்கள். கல்வி அமைச்சரை அழைத்து பேச வேண்டியவர்கள், கவர்னரை அழைத்து பேசுகிறார்கள். இந்த எதிர்ப்பை சமாளிக்க இளைய சமுதாயத்தால்தான் முடியும். அதற்கு உதயநிதி பட்டாளம் உதவியாக நிற்க வேண்டும். இளைய சமுதாயத்திற்கு நான் சொல்லும் வேண்டுகோள்
மிகப்பெரிய ஆபத்து நம்மை சூழ்ந்து கொண்டுள்ளது.
இளைய சமுதாயமே, வீறு கொண்டு எழு. புதிய கலாசார போராட்டத்திற்கு தயாராகுங்கள். நான் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். இதனால், நான் எவருக்கும் எதிரானவன் அல்ல. ஓம் என்று சொல்வது போல், நான் திராவிடன் என்று சொல்லுங்கள். கருணாநிதியிடத்தில் இருந்ததுபோல், ஸ்டாலினிடத்தில் இருப்பேன். இது சத்தியம்” எனப் பேசினார்.