துண்டு கரும்பு கொடுப்பதால் பட்ஜெட்டில் துண்டு விழவா போகிறது – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

துண்டு கரும்பு கொடுப்பதால் பட்ஜெட்டில் துண்டு விழவா போகிறது – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
துண்டு கரும்பு கொடுப்பதால் பட்ஜெட்டில் துண்டு விழவா போகிறது – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

துண்டு கரும்பு கொடுப்பதனால் பட்ஜெட்டில் துண்டு விழப்போகிறதா? அரசால் கரும்பு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் 43 ஆயிரம் ஏக்கருக்கு மேலே விவசாயிகள் செங்கரும்பு நடவு செய்துள்ளனர். இதை நம்பி ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள், கரும்பை அரசு கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகையோடு வழங்கும் என்ற நம்பிக்கையோடு இருந்த நிலையில் அரசு ஏமாற்றத்தை பரிசளித்திருக்கிறது.

அதிமுக ஆட்சிக் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் கரும்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பலனடைந்து வந்தவர்கள் இன்றைக்கு கண்ணீரிலே தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். கரும்பு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள், பொருளாதார தாக்குதல் அவர்கள் மீது தொடுக்கப்பட்டு இருக்கிறது.

கரும்பு ஏன் வழங்கவில்லை என்று சொன்னால் அதற்கு பணம் தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று விளக்கம் தருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு திமுக ஆட்சியில் 21 வகையான பொருள்கள் வழங்கப்பட்டதாக சொல்லி அதில் எத்தனை லட்சம் புகார்களை இந்த அரசு சந்தித்தது என்பது நமக்கு நினைவில் இருக்கிறது.

இந்த பொங்கலில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டாமா? இது அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் வேதனையில் இருக்கிறார்கள். இந்த கரும்பு கொடுப்பதனால் உங்களுடைய பட்ஜெட்டில் என்ன துண்டு விழுவா போகிறது. துண்டு கரும்பு கொடுப்பதனாலே பட்ஜெட்டில் துண்டு விழப் போகிறதா? பட்ஜெட்டில் துண்டு விழுவதாக தெரியவில்லை.

ஏற்கெனவே அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. எடப்பாடியார் முதல்வராக இருந்திருந்தால் கரும்பு கிடைத்திருக்கும், சர்க்கரை கிடைத்திருக்கும், அரிசி கிடைத்திருக்கும் இதனால் மகிழ்ச்சி கிடைத்தது. இப்போது வேதனை தான் இருக்கிறது.

இன்றைய முதலமைச்சர் அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது சொன்னதை மறந்து விட்டீர்களா? எடப்பாடியார் 2500 ரூபாய் வழங்கிய போது, நீங்கள் அப்போது ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று சொன்னீர்களே? சொன்னது என்ன ஆச்சு ஸ்டாலின் அண்ணாச்சி.
கரும்பை கொள்முதல் செய்தால் தான் விவசாயியுடைய கண்ணீரைத் துடைக்கிற அந்த நல்ல காரியம் அல்லவா நடைபெறும். அதிலே என்ன உங்களுக்கு வருத்தம் என்று தெரியவில்லை, இந்த சிந்தனை எப்படி உதித்தது என்று தெரியவில்லை.

ஆகவே அரசை நம்பி விதைத்திருக்கிற கரும்பை கொள்முதல் செய்வதற்கு இந்த அரசு முன்வரவேண்டும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையுடன் கரும்பை இணைக்க வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com